ஜப்பான் மீது வடகொரியா ஏவுகணை தாக்குதல்: ரஷியா கவலை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஜப்பான் நாட்டின் வான்வெளியில் ஏவுகணையை செலுத்தியுள்ள வடகொரியாவின் போக்கு கொரியா தீபகற்பப் பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளதாக ரஷியா கவலை தெரிவித்துள்ளது.

ஜப்பான் கடல்பகுதியை குறிவைத்து கண்டம்விட்டு கண்டம்பாயும் ஏவுகணையை வடகொரியா இன்று செலுத்தியது. ஜப்பானின் வடபகுதியில் உள்ள ஹொக்கைடோ தீவின் மேற்பரப்பில் பறந்த இந்த சக்திவாய்ந்த ஏவுகணை 550 கிலோமீட்டர் உயரத்தில் பறந்து, 2700 கிலோமீட்டர் தூரத்தை கடந்துவந்து ஜப்பான் கடல் பகுதியில் விழுந்தது.

இந்த ஏவுகணை விழுந்த பகுதிக்கு அருகாமையில்தான் டோக்கியோ நகரை அடுத்துள்ள குவாம் தீவில் அமெரிக்க விமானப்படைத்தளம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதலால் ஹொக்கைடோ தீவின் கடற்பகுதியில் இருந்த கப்பல்களுக்கு எவ்வித சேதமும் இல்லை என்று தெரியவந்துள்ள நிலையில், அமெரிக்காவின் நட்பு நாடான ஜப்பானை மிரட்டும் வகையில் வடகொரியா இன்று நடத்தியுள்ள தாக்குதலுக்கு ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், சர்வதேச பொருளாதார தடையையும் மீறி வடகொரியா நடத்திவரும் அணுகுண்டு மற்றும் ஏவுகணை பரிசோதனைகளுக்கு சீனாவும், ரஷியாவும் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வந்துள்ளன. வடகொரியாவின் அத்துமீறல் தொடர்பாக வெளிப்படையாக கண்டனம் தெரிவிக்கவும் இவ்விரு நாடுகளும் முன்வந்ததில்லை.

இந்நிலையில், இன்று ஜப்பான் வான்வெளியில் ஏவுகணையை செலுத்தியுள்ள வடகொரியாவின் போக்குக்கு ரஷியா கவலை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ரஷியாவின் வெளியுறவுத்துறை மந்திரி செர்கேய் ரியாப்கோவ் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கொரியா தீபகற்பப் பகுதியில் பதற்றம் அதிகரித்து வருவதை காணும் நிலையில், இதுதொடர்பாக நாங்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *