சீனாவின் அடாவடி வர்த்தகம் தொடர்பாக விசாரணை நடத்த டொனால்ட் டிரம்ப் அதிரடி உத்தரவு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தை மீறியவகையில் சீனா நடத்திவரும் ’டூப்ளிகேட்’ மற்றும் ’கோல்மால்’ வர்த்தக நடைமுறைகள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளின் பலத்தை வைத்து அமெரிக்காவை மிரட்டிவரும் வட கொரியாவை கண்டிக்க தவறிய சீனா, வட கொரியாவின் போக்குக்கு ஆதரவு தெரிவித்து வருவது அமெரிக்க அரசுக்கு அதிருப்தியையும் எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.

வடகொரியாவுக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் சீனாவை தனது கைப்பிடிக்குள் வைத்துக் கொள்ளும் ராஜதந்திர முயற்சிகள் பயனற்றுப் போனதால் அந்நாட்டை மிரட்டும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய உத்தரவு ஒன்றை இன்று பிறப்பித்துள்ளார்.

அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தை மீறியவகையிலும், சர்வதேச வர்த்தக சட்டங்களை மீறீய வகையிலும் சீனா நடத்தியுள்ள முறைகேடுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க நாட்டின் வர்த்தகத்துறை செயலாளருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமைகளை பிறநாடுகள் திருடி பயன்படுத்துவதால் நமது நாட்டில் ஆண்டுதோறும் பல லட்சம் மக்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படுகிறது, பல்லாயிரம் கோடி டாலர்கள் அளவுக்கு பொருளாதார இழப்பும் உண்டாகிறது. நமது நாட்டில் இருந்து பலகாலமாக பிறநாடுகள் செய்துவரும் இந்த சுரண்டல்களுக்கு எதிராக நாம் இதுவரை எதுவுமே செய்ததில்லை.

எனவே, நமது தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார் சொத்துரிமையை களவாடி, சீனா செய்துவரும் வர்த்தகங்கள் தொடர்பாக ஆய்வு செய்யுமாறு இன்று நான் உத்தரவிட்டுள்ளேன். அமெரிக்காவின் அதிபராக நமது நாட்டின் தொழிலாளர்கள், தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறையை பாதுகாக்க வேண்டியது எனது கடமையாகவும், பொறுப்பாகவும் உள்ளது.

மேலும், நமது நாட்டின் வர்த்தக முத்திரை சட்டங்கள், காப்பிரைட் சட்டங்கள், வர்த்தக ரகசியங்கள், அறிவுசார் சொத்துரிமை சட்டங்கள் போன்றவை நமது நாட்டின் வளங்கள் மற்றும் பாதுகாப்புடன் தொடர்புடையவையாகும்.

இவற்றை நாம் பேணிப் பாதுகாக்க வேண்டும். நாட்டை வலிமை மிக்கதாக்கும் புதிய ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள், படைப்புகள் ஆகியவற்றை பாதுகாப்பதுடன் நமது தொழிலாளர்களின் நலன்களையும் நாம் பாதுகாக்க வேண்டியுள்ளது என இந்த புதிய உத்தரவுக்கான கோப்பில் கையொப்பமிட்ட பின்னர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டார்.

டிரம்ப்பின் இந்த உத்தரவு தொடர்பான செய்திகள் வெளியானதும் சீன நாட்டின் வர்த்தகத்துறை அமைச்சகம் உடனடியாக கண்டன அறிக்கை வெளியிட்டது.

இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் வர்த்தக சட்டங்கள் தொடர்பான உண்மைகளை புறக்கணிக்கும் வகையில் அமெரிக்கா நடவடிக்கை எடுத்தால் சீனா கைகட்டிக் கொண்டு மவுனமாக இருக்க முடியாது, எங்களை பாதுகாத்துக் கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என சீன வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *