ஏமன் நாட்டில் 2 லட்சம் குழந்தைகள் பட்டினியால் உயிர் இழக்கும் அபாயம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஏமன் நாட்டில் 2 லட்சம் குழந்தைகள் உயிர் இழக்கும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக சேவ் த சில்ரன் சமூக அமைப்பு தெரிவித்து உள்ளது.

அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அங்கு அரசு கட்டுப்பாட்டில் சில பகுதிகளும், புரட்சி படையினர் கட்டுப்பாட்டில் சில பகுதிகளும் இருக்கின்றன.

இரு தரப்பினரும் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர். இதனால் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வேறு இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு போதிய உணவு மற்றும் சுகாதார வசதிகள் கிடைக்கவில்லை.

எனவே, ஏராளமானோர் பட்டினியால் தவிக்கிறார்கள். சுகாதார சீர் கேட்டால் அவர்கள் வசிக்கும் பகுதியில் காலரா நோய் பரவியது. இதில், ஏற்கனவே ஆயிரக்கணக்கானோர் பலியாகி இருக்கிறார்கள். தொடர்ந்து காலரா நோய் பரவிய வண்ணம் உள்ளது.

ஆனால், மக்கள் பட்டினியால் வாடுவதால் அவர்களிடம் போதிய நோய் எதிர்ப்பு சக்தி இல்லை. எனவே, காலரா உள்ளிட்ட எந்த நோய் தாக்கினாலும் அதை எதிர்த்து போராடும் அளவுக்கு அவர்களுடைய உடல்நிலை இல்லை.

 

 

இதில், குழந்தைகளின் நிலைமை மிக மோசமாக உள்ளது. பட்டினி காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி முற்றிலும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

இதனால் அவர்கள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி உயிர் இழப்பை சந்திக்க நேரிடும் என்று சர்வதேச குழந்தைகள் அமைப்பான சேவ் த சில்ரன் சமூக அமைப்பு கூறி இருக்கிறது.

இவ்வாறு 2 லட்சம் குழந்தைகள் வரை உயிர் இழக்கும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்து இருக்கிறது.

எனவே, சர்வதேச சமுதாயங்கள் ஏமன் நாட்டு குழந்தைகளை காப்பாற்ற தீவிர நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *