சசிகலா பேனர் அகற்றியது வரவேற்கத்தக்கது. அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவதற்கான இணக்கமான சூழல் உருவாகியுள்ளதால் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று கே.பி.முனுசாமி கூறினார்.
அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவதற்கான அதிகாரபூர்வமான பேச்சுவார்த்தை இன்று பிற்பகலில் தொடங்குகிறது.
இதில் ஓ.பி.எஸ். மற்றும் எடப்பாடி அணி சார்பில் தலா 7 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்று பேசுகிறார்கள்.
அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இன்று தொடங்குவதையொட்டி ஓ.பி.எஸ். அணியினர் இன்று காலை ஆலோசனை நடத்தினார்கள். கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பி.எஸ். வீட்டில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கே.பி.முனுசாமி, ஜே.சி.டி.பிரபாகர், பி.எச்.பாண்டியன், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட இருப்பதால் பேச்சுவார்த்தையின் போது நடந்து கொள்வது எப்படி என்பது பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு கே.பி.முனுசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுசூதனன் வேண்டுகோளின்படி அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் வைத்திருந்த சசிகலா பேனர்கள் இன்று அகற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது வரவேற்கத்தக்கது.
எங்களது கோரிக்கைகள் ஏற்கப்பட்டு வருவதால் பேச்சு வார்த்தைக்கு இணக்கமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஒரே குடும்பத்தில் உள்ள அண்ணன் – தம்பிகளுக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு, மன சங்கடங்களை பேச்சுவார்த்தை மூலம் இணக்கமான சூழ்நிலைக்கு கொண்டு வர முடியும். நாங்கள் வேண்டுகோளை வைக்கிறோம். அவர்களும் அதை ஏற்று செயல்படுத்தி இணக்கமான சூழ்நிலையை உருவாக்கி வருகிறார்கள். இணக்கமான சூழல் உருவாகியுள்ளதால் பேச்சு வார்த்தை நடைபெறும்.
நாங்கள் பேச்சுவார்த்தையை தொடங்கும் முன்பே சசிகலா கட்-அவுட்களை அகற்றி இருக்கிறார்கள். எங்கள் எண்ணம் அவர்களுக்கு தெரியும். எங்கள் எண்ணத்தை நிறைவேற்ற அங்கு பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள்.
எங்கள் விருப்பத்துக்கு தடை போட சிலர் இருப்பார்கள். அவர்களை கட்டுக்குள் கொண்டு வருவார்கள்.
அண்ணன் – தம்பிகளுக்குள் உள்ள சின்ன சின்ன வருத்தங்கள் பேச்சு வார்த்தைக்குபிறகு சரியாகி விடும். அம்மா மர்ம மரணத்தில் சி.பி.ஐ. விசாரணை என்ற எங்களின் கோரிக்கை எப்போதும் உயிரோட்டமாக இருக்கும்.
பேச்சுவார்த்தை என்பது சுமூகமாக அமையும் என்ற நம்பிக்கை வரும்போது பேச்சுவார்த்தை தொடங்கிவிடும்.
அ.தி.மு.க.வை கைப்பற்ற தினகரன் எவ்வளவு பெரிய தவறு செய்துள்ளார். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு கூட அ.தி.மு.க.வை அபகரிக்க யாரும் இதுபோன்ற தவறு செய்யவில்லையே. அன்று உண்மையாக கட்சிக்கு உழைத்தவர்கள் இரண்டு அணிகளாக நின்றார்கள்.
ஜானகி அம்மையார் நான் ஒதுங்கிக் கொள்கிறேன். நீங்கள் ஒன்று சேர்ந்து கொள்ளுங்கள் என்று கூறினார். அவர் கூறியதால் நாங்கள் ஒன்றாக இணைந்தோம்.
ஆனால் இன்று தேர்தல் கமிஷனையே விலைக்கு வாங்கி தினகரன் கட்சியை கைப்பற்ற முயன்றுள்ளார். இதனால் சட்டம் தன் கடமையை செய்துள்ளது. அதன் மூலம் தர்மம் வெல்லும் என்பது உறுதியாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.





