அ.தி.மு.க.,வில் நிலவும் சர்ச்சைகளை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, குழம்பிய குட்டையில் ஸ்டாலின் மீன் பிடிக்க முயற்சிக்க வேண்டாம் – ஓ.பன்னீர்செல்வம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சசிலாவைப் பற்றி, ஓ.பன்னீர்செல்வம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தில் விமர்சித்து பேசினால் தான், அது மக்கள் மத்தியில் வேகமாகச் சென்று சேர்ந்து, தினகரனுக்கு எதிரான மனநிலையை உருவாக்கும்.
ஆனால், ஓ.பன்னீர்செல்வம் அதை செய்யாமல் இருக்கிறார். அதை, அவர் செய்வது போல, பேசுங்கள் என, கட்சியின், சீனியர் தலைவர்கள் சிலர், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினிடம் கூறியுள்ளனர். அதையடுத்தே, அவர், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து, ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிறைய தெரியும். ஆனாலும், அவர் தொடர்ந்து பேச மறுத்து வருகிறார் என்று, சமீபத்தில், பொதுக்கூட்டத்தில் போட்டுத் தாக்கினார்.

பிரசாரத்தில் பாய்ச்சல்:
அவர் இப்படி பேசியதும், ரியாக்ட் செய்யத் துவங்கி உள்ளார் பன்னீர்செல்வம். பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது:ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று பொது மக்களுக்கு இருக்கும் சந்தேகங்களை போக்க வேண்டும் என்பதற்காகத்தான், ஆரம்பத்தில் இருந்தே இந்த விஷயத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என, நாங்கள் கோரி வருகிறோம்.
ஜெயலலிதா முதல்வராக இருந்து இறந்ததும், நான் முதல்வராகவும், மதுசூதனன், கட்சியின் பொதுச் செயலராகவும் இருந்து செயல்பட வேண்டும் என்று, கட்சியின் மூத்த தலைவர்கள் விருப்பம் தெரிவித்தனர். சசிகலா அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. தானே, பொதுச் செயலராகவும் முதல்வராகவும் இருக்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தார். இதை தாங்கள் ஏற்கவில்லை என்று, தற்போது அமைச்சர்களாக இருக்கும் பலரே, என்னிடம் தெரிவித்தனர். அவர்கள் மனநிலை, இன்றளவிலும் அப்படித்தான் உள்ளது.
ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது, அந்த சிகிச்சை போதுமானதாக இல்லை என்று சிலர் கருத்துச் சொன்னார்கள். அதனால், தேவையானால், வெளிநாட்டுக்கு ஜெயலலிதாவை எடுத்துச் சென்று, மேல் சிகிச்சை அளிக்கலாம் என, தம்பிதுரை மூலமாக, சசிகலாவுக்கு எடுத்துச் சென்றேன். அதை மறுத்து, இங்கேயே சிறப்பான சிகிச்சை அளிக்கின்றனர் என சொல்லி விட்டனர்.
அதனால், என்னால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியவில்லை. இருந்தபோதும், பல்வேறு விதமான சந்தேகங்கள் எல்லோரையும் போலவே, எங்களுக்கும் இருந்து கொண்டிருந்தது. அதனால்தான், விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று கூறுகிறோம்.
மற்றபடி, சசிகலாவின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சிப்பதில், எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. சசிகலா குறித்து நான் இதுவரை சொல்லாத, 90 சதவிகித செய்திகளையும் விரைவில் சொல்வேன். தற்போது, அ.தி.மு.க.,வில் நிலவும் சர்ச்சைகளை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, குழம்பிய குட்டையில் ஸ்டாலின் மீன் பிடிக்க முயற்சிக்க வேண்டாம். இவ்வாறு பன்னீர்செல்வம் பேசினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *