கடும் கோபத்தில் சசிகலா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டதால், தினகரன் மீது சசிகலா கடுமையான கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட வீடியோவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

20 நிமிடம் ஓடும் இந்த வீடியோவில் ஜெயலலிதா நைட்டி அணிந்த நிலையில், பழச்சாறு பருகியபடி தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கிறார். ஜெ.வின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், முதன் முதலாக தினகரன் தரப்பில் இருந்து இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு ஜெ. மாற்றப்பட்ட போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது என வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

சசிகலா குடும்பதினர் மீது சுமத்தப்பட்டிருக்கும் பழி சொல்லை நீக்கவே இந்த வீடியோவை வெளியிட்டதாக அவர் தெரிவித்துளார். சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி தனது முகநூல் பக்கத்தில் “தினகரன் உடனிருக்கும் வெற்றிவேலின் கீழ்த்தரமான செயல்” என பதிவிட்டிருந்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணபிரியா “இந்த வீடியோ ஜெயலலிதா எடுக்க சொல்லி சசிகலாதான் எடுத்தார். இதை விசாரணை கமிஷன் கேட்டால் கொடுக்க வேண்டும் எனக்கூறி நாங்கள் தினகரனிடம் கொடுத்தோம். மக்கள் பார்ப்பதற்காக அல்ல. இப்போது இந்த வீடியோவை வெளியிட வேண்டிய அவசியமில்லை. வெற்றிவேல் மீது தினகரன் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

கொலைபழி சுமத்தப்பட்ட போது கூட சசிகலா இதை வெளியிடவில்லை. அது அவர் ஜெ.வின் மீது வைத்துள்ள அன்பு மற்றும் மரியாதை. தினகரனிடம் கொடுத்த வீடியோ எப்படி வெற்றிவேல் கையில் சென்றது? இதை வெளியிட வேண்டும் என நினைத்திருந்தால் சசிகலா எப்போதே வெளியிட்டிருக்கலாம். வெற்றிவேலின் இந்த செயலை நான் கடுமையாக கண்டிக்கிறேன்” என அவர் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக கிருஷ்ணப்ரியாவின் சகோதரர் விவேக்கும், தினகரன் தரப்பு மீது கோபத்தில் இருப்பதாக தெரிகிறது.

மேலும், தொலைக்காட்சி மூலம் வீடியோ வெளியானது பற்றி தெரிந்து கொண்ட சசிகலா தினகரன் மீது கடுமையான கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அவரை சந்தித்து தங்கள் தரப்பு விளக்கங்களை கூற விவேக் மற்றும் கிருஷ்ணபிரியா ஆகியோர் முயன்றுள்ளனர். ஆனால், யாரையும் சந்திக்க விரும்பவில்லை என சசிகலா கூறிவிட்டதாக தெரிகிறது.

அதேபோல், புகழேந்தி மூலம் சசிகலாவை சமாதானப்படுத்த தினகரன் முயன்றுள்ளார். அவரை சந்திக்க முடியாது என சசிகலா மறுத்துவிட்டாராம். எனவே, அவரை நேரில் சந்தித்து தன் தரப்பு விளக்கத்தை கொடுக்க தினகரன் முன்வந்தார்.

ஆனால், அவரையும் சந்திக்க முடியாது என உறுதியாக கூறிவிட்டாராம் சசிகலா. அதோடு நிற்காமல், ஒருவேளை ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றால் கூட தினகரன் தன்னை வந்து சந்திக்கக்கூடாது என சசிகலா தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

எந்த சூழ்நிலையிலும் வெளியிட மாட்டோம் என தன்னிடம் சத்தியம் செய்துவிட்டு அதை அனைவரும் மீறிவிட்டனர் என சசிகலா கோபத்தில் இருக்கிறாராம். இந்த கோபத்தையே கிருஷ்ணப்ரியா செய்தியாளர்கள் முன்னிலையில் காட்டினார் எனக் கூறப்படுகிறது.

மொத்தத்தில், ஜெ.வின் வீடியோ விவகாரத்தில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் மொத்த கோபத்திற்கும் தினகரன் ஆளாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *