மதுரை விழாவிற்கு ஓபிஎஸ்-ற்கு அழைப்பு இல்லை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மதுரையில் நடைபெறும் முப்பெரும் விழாவில் ஓபிஎஸ் மற்றும் அவரின் அணியினருக்கு அழைப்பிதழ் வழங்கப்படவில்லை என ஓ.பி.எஸ் அணி ஐடி பிரிவு ஆஸ்பயர் சுவாமிநாதன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ஓ.பி.எஸ் அணியில் இருக்கும் மைத்ரேயன் தனது முகநூலில் “ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணி இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?” என ஒரு பதிவை இட்டு, இரு அணிகளுக்கும் இடையே இன்னும் புகைச்சல் நீடிக்கிறது என்பதை அவர் உறுதி படுத்தியுள்ளார்.

அந்நிலையில், இரட்டை இலை சின்னம் மீட்கப்பட்டதையடுத்து, மதுரை கப்பலூரில் முப்பெரும் விழாவை நடக்கவுள்ளது. ஆனால், அதற்கான அழைப்பிதழ் ஓ.பி.எஸ் மற்றும் அவரது அணியில் உள்ளவர்கள் யாருக்கும் கொடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால், எடப்பாடி அணி தங்களிடம் பாரபட்சம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், ஓ.பி.எஸ் ஆதரவாளரும், அவரது அணியில் இருக்கும் ஐ.டி.பிரிவு ஆஸ்பயர் சுவாமிநாதன் தனது டிவிட்டர் பக்கத்தில் கீழ்கண்டவாறு பதிவு செய்துள்ளார்.

*இரட்டை இலை மீட்பு….*
மாபெரும் கொண்டாட்டமாம்….
முப்பெரும் விழாவாம்…..
கட்சி கொடி ஏற்றுவார்களாம்……
*மாண்புமிகு அமைச்சர் அறிவிப்பு…..*
“யாருக்கும் அழைப்பும் இல்லை தகவலும் இல்லை,
தலைவர்கள் உட்பட…..”
மனங்கள் உருண்டுகொண்டு தான் இருக்கும் போல….

எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், இரட்டை இலை கிடைத்த பின்பும் அதிமுக அணியில் அதிருப்தி தொடர்வது உறுதியாகியுள்ளது.

ஏற்கனவே மைத்ரேயன் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில் ஐ.டி. பிரிவு ஆஸ்பயர் சுவாமி நாதனும் அதிருப்தி தெரிவித்திருப்பது அதிமுக வாட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து தொலைக்காட்சி வழியாக கருத்து தெரிவித்த சுவாமிநாதன் “ 15 நாட்களுக்கு முன்பே திட்ட மிட்ட இந்த விழாவிற்கு, திட்டமிட்டே ஓ.பி.எஸ் மற்றும் எங்கள் அனைவரையும் புறக்கணித்துள்ளனர். இப்படி ஒரு விழா நடப்பதே அண்ணன் ஓபிஎஸ்-ற்கு தெரியவில்லை. மேலும், மைத்ரேயன், கே.பி.முனுசாமி உள்ளிட்ட யாருக்கும் அழைப்பிதழ் செல்லவில்லை. தகவலும் இல்லை. இது கட்சியின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல” என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *