3 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கடந்தவாரம் தென் தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளை தாக்கிய ஒகி புயல் தற்போது குஜராத் மாநிலத்தை நோக்கி திரும்பி உள்ளது. அந்த புயல் வலுவிழந்து நள்ளிரவிலோ அல்லது இன்று(புதன்கிழமை) காலையிலோ சூரத் அருகே கரையை கடக்கலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

ஒகி புயல் குஜராத்தை தாக்கும் என்பதால் குஜராத், மராட்டிய மாநில மீனவர்கள் 6-ந்தேதி(இன்று) முதல் 8-ந்தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவேண்டாம் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மீனவர்களை எச்சரித்து இருக்கிறது. புயல் கரையை கடக்கும்போது, மணிக்கு 50 முதல் 70 கி.மீ.வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று மாலை ஒகி புயல் சூரத் நகரில் இருந்து மேற்கே 390 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

இதேபோல் வங்கக் கடலின் தென் கிழக்கு பகுதியில் புதிய புயல் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்றும், இது வலுவடைந்து தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் எனவும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கணித்து இருக்கிறது.

இது அடுத்த 3 நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகரும் என்றும் அப்போது பலத்த காற்று வீசும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் தமிழகம், ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்கள் மற்றும் அந்தமான் தீவு பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் 6-ந்தேதி(இன்று) முதல் 8-ந்தேதி வரை 3 நாட்களுக்கு கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

மீட்பு பணி தீவிரம்

இதற்கிடையே கேரளாவில் மாயமாகி, இன்னும் மீட்கப்படாத 92 மீனவர்களை மீட்கும் பணியில் கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படை, மாநில மீன்வளத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே 252 கேரள மீனவர்களை மேற்கண்ட படையினர் மீட்டு விட்டனர் என்பது நினைவு கூரத்தக்கது.

புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள லட்சத் தீவுக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்வதில் மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் இருந்து கடற்படைக்கு சொந்தமான 8 கடற்படை கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. அங்கு அரிசி, பருப்பு, உருளைக்கிழங்கு, குடிநீர், போர்வைகள், மழைக்கோட்டு உள்ளிட்ட பல டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *