கடலோர மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும், கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. கனமழையின் காரணமாக சென்னை நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது.

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை கடந்த மாதம் 27-ந் தேதிதொடங்கியது.

கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த திங்கட்கிழமை வெளுத்து வாங்கிய மழை, நேற்றுமுன் தினம் பகலில் ஓய்ந்து இருந்தது. ஆனால் அன்று நள்ளிரவுக்கு பிறகு சென்னை நகரிலும் காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பிற கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.

சென்னையில் இடி-மின்னலுடன் கொட்டிய மழை நேற்று அதிகாலை வரை நீடித்தது. பின்னர் காலையில் சற்று ஓய்ந்திருந்த மழை 9 மணிக்கு பிறகு மீண்டும் பெய்ய தொடங்கியது. அதன்பிறகு இடைவிடாமல் மழை பெய்து கொண்டே இருந்தது.

ஏற்கனவே பெய்த மழையால் சென்னை மற்றும் புறநகர் நகர் பகுதிகளில் தாழ்வான இடங்களிலும், சாலைகளிலும் தேங்கிய தண்ணீர் வடியாத நிலையில், நேற்று பகலில் தொடர்ந்து மழை பெய்ததால் சென்னை நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியதால், தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தண்ணீர் தேங்கியதன் காரணமாக சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

தாழ்வான பகுதிகளில் தேங்கிய தண்ணீரை மின்சார மோட்டர் மூலம் வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.

சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் ஏரிகளின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

கடலூர் மாவட்டத்திலும், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியிலும் நேற்று லேசான மழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலை மழை பெய்தது. நாகை மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்தது. தஞ்சாவூரில் நேற்று காலை சிறிது நேரம் மழை பெய்தது. அதன்பிறகு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

தமிழ்நாட்டில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழை பெய்து உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும், கடலோர மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *