அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் பதவி ராஜினாமா
பெங்களூர் சிறையில் சரண் அடைவதற்காக சசிகலா புறப்பட்டுச் சென்ற நிலையில், அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ.க்கள், கூவத்தூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சசிகலாவுக்கு எதிராக களம் இறங்கியுள்ள முதலமைச்சர் பன்னீர்செல்வம் அணியிலும் முக்கிய நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்ளனர். பல்வேறு பகுதிகளில் இருந்து ஆதரவாளர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
இதற்கிடையே சசிகலாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதனால், முதல்வர் பதவிக்கு அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்ததுடன், கட்சிப் பணியை கவனிப்பதற்காக டிடிவி தினகரன் கட்சியில் சேர்க்கப்பட்டு துணை பொதுச்செயலாளர் பதவியை வழங்கியிருக்கிறார். பின்னர் நீதிமன்றத்தில் சரண் அடைவதற்காக பெங்களூர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் பதவியில் இருந்து கருப்பசாமி பாண்டியன் திடீரென ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கருப்பசாமி பாண்டியன், டிடிவி தினகரனை துணை பொதுச்செயலலாளராக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக கூறினார்.
‘ஜல்லிக்கட்டு போராட்டம், வார்தா புயலின்போது முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பாக செயல்பட்டார். குடிநீர் பிரச்சனை வந்தபோது ஆந்திரா சென்று முதலமைச்சரை சந்தித்து பேசி ஏற்பாடு செய்தார். மக்களால் ஏற்றுக்கொண்டவர்களிடம் இருந்து அழைப்பு வந்தால் செல்வேன்’ என்றார் கருப்பசாமி பாண்டியன்.









