பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 25-ந் தேதி கச்சத்தீவை முற்றுகையிடும் போராட்டம் -மீனவர் சங்கத்தலைவர்கள் அறிவிப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 25-ந்தேதி கச்சத்தீவை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என மீனவர் சங்கத்தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

ராமேசுவரம் மீனவர் சங்கத்தலைவர்கள் போஸ், தேவதாஸ், ஜேசு, எமரிட், சகாயம் ஆகியோர் இன்று மீனவர்களுடன் ஆலோசனை நடத்தினர். இதில் திரைப்பட இயக்குநர் கவுதமன் மற்றும் மீனவர்கள், அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக்கு பின் மீனவர் சங்கத்தலைவர்கள் கூறியதாவது:-

வருகிற 7-ந் தேதி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இலங்கை சென்று அந்நாட்டு அதிகாரிகளிடம் தமிழக மீனவர்களின் பிரச்சனைகள் குறித்து பேச உள்ளோம். எங்களது கோரிக்கைகளான இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள், படகுகளை விடுவிக்க வேண்டும்.

1974-ம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தத்தின் படி கச்சத்தீவில் வலைகளை உலர்த்தவும், ஓய்வெடுக்கவும், பாரம்பரிய மீன்பிடி உரிமையையும் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்படும்.

இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வருகிற 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து மீனவர்களையும் ஒன்று திரட்டி குடும்பத்தோடு கச்சத்தீவில் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக இயக்குநர் கவுதமன் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோவின் வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *