தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும் – தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 தீர்மானங்கள் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணிக்கு நடந்தது.

தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் காலை 9.50 மணிக்கு அறிவாலயம் வந்தார். அவரை தொடர்ந்து பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வந்தார்.

இதைத்தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது.

கூட்டத்தில் முதன்மை செயலாளர் துரைமுருகன், துணை பொதுச் செயலாளர் வி.பி. துரைசாமி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, கொள்கை பரப்பு செயலாளர்கள் ஆ. ராசா, திருச்சி சிவா, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் பொன் முடி, எ.வ.வேலு, கே.என். நேரு, தா.மோ. அன்பரசன், ஜெ. அன்பழகன், பி.கே. சேகர் பாபு, மா. சுப்பிரமணியன், மாதவரம் சுதர்சனம், ஆவடி நாசர், சுரேஷ்ராஜன், சுந்தர், கல்யாண சுந்தரம், சிவசங்கர், சக்கரபாணி, பெரிய கருப்பன் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் அதில் தி.மு.க பெருவாரியான இடங்களில் வெற்றி பெறுவது குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஊர்களிலும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என்றும், வலியுறுத்தப்பட்டது.

அ.தி.மு.க வில் உட்கட்சி பூசல் நிலவுவதால் எந்த நேரத்தில் பொதுத்தேர்தல் வந்தாலும் அதையும் எதிர்கொள்ள தயாராவது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

சட்டசபை சரித்திரத்தில் வைர விழா காணும் தலைவர் கலைஞருக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

விவசாயிகள் பிரச்சினைக்காக நடத்தப்பட்ட முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக அமைந்தது. இதற்கு காரணமாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு முற்றிலும் எதிராக மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு தொடர்ந்து இந்தியைத் திணிக்கும் எதிர்மறை முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவது கண்டனத்துக்குரியது.

இந்தி திணிப்பை எதிர்த்து மாவட்டந்தோறும் பல்வேறு கட்டங்களாக கருத்தரங்குகள் நடத்தப்படுகிறது.

கிராமப்புற மாணவர்கள், நகர்புறத்தில் உள்ள ஏழை மாணவர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் “நீட்” நுழைவுத் தேர்வால் பாதிக்கப்படுவதால், இந்தத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

தமிழகச் சட்டமன்றம் நிறைவேற்றியுள்ள இரு மசோதாக்களுக்கும் மத்திய அரசு உடனடியாகக் குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்றுக் கொடுத்து, தமிழகத்திற்கு “நீட்” தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்த்து போர்க்கால நடவடிக்கையில் அ.தி.மு.க அரசு ஈடுபட வேண்டும்.

தமிழகத்தில் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியில் இருந்து அ.தி.மு.க அரசு பின் வாங்கி விட்டது கண்டனத்திற்குரியது.

தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும், மூடப்படும் மதுக்கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்குத் தாமதமின்றி மாற்று வேலை வாய்ப்புகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற வேண்டும்.

விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கடன்களை மே 25 ஆம் தேதிக்குள் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற டெல்லியில் போராடிய விவசாயிகளின் ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணுவின் அவர்களின் கோரிக்கையை மத்திய – மாநில அரசுகள் ஏற்க வேண்டும்.

தற்கொலை செய்து கொண்ட 400க்கும் மேற்பட்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய நிவாரண நிதியை இன்னும் வழங்காமல் தாமதிக்கும் அ.தி.மு.க அரசுக்கு கண்டனத்தை தெரிவிப்பதுடன், விவசாயிகளின் துயர்துடைக்க பாதிக்கப்பட்ட விவசாய குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரண நிதியை வழங்கிட வேண்டுமென்று இந்தக் கூட்டம் அ.தி.மு.க அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைத்து தமிழக விவசாயிகளின் காவிரி உரிமையைப் பாதுகாக்க வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *