நடிகர் ரஜினியின் இலங்கை பயணம் ரத்து: எங்களுக்கு எதிராக தமிழர்களை திசை திருப்பி விடுகிறார்கள் – விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நடிகர் ரஜினியின் இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எங்களுக்கு எதிராக தமிழர்களை திசை திருப்பி விடுவதாக தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் இலங்கையில் லைக்கா நிறுவனம் சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கும் விழாவில் பங்கேற்க செல்ல இருந்தார். அவரது இலங்கை பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டவர்கள் கூறினர். இதையடுத்து ரஜினிகாந்த் தனது இலங்கை பயணத்தை ரத்து செய்தார்.

இதனால் லைக்கா நிறுவனம், அரசியல்வாதிகள் சுயலாபத்துக்காக ரஜினி பயணத்தை ரத்து செய்ய வைத்து விடடனர் என்று கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில் ரஜினியின் இலங்கை பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்கான காரணம் குறித்து சென்னையில் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

ரஜினிகாந்த் இலங்கை பயணத்தை ரத்து செய்ததற்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவர் ஈழத்துக்கு எப்போது வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கூறினோம்.

விழாவில் சிங்கள எம்.பி.க்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் ரஜினி பங்கேற்றால் தமிழர்களுக்கு எதிராக அமையும். கிளிநொச்சி, வவுனியா, மட்டகளப்பில் இலங்கை தமிழர்கள் சம உரிமைக்காக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இறுதி யுத்தம் முடிந்த பிறகு 24 ஆயிரம் இளைஞர்கள், பெண்களை இலங்கை ராணுவம் பிடித்து சென்றது. தற்போது அவர்களை காணவில்லை. இதுபற்றி சிங்கள அரசு உரிய பதில் தரவில்லை.

தமிழர்களுக்கு சரியாக உணவு, அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. அவர்கள் இடங்கள் ஆக்கிரமிக்கப்படுகிறது.

இந்த விழாவில் ரஜினி கலந்து கொண்டால் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணைக்கு தடையாக இருக்கும். அது விசாரணையை திசை திருப்பி விடும்.

சிறிசேனா, ராஜபக்சேவை விட அதிக கொடுமைகளை தமிழர்களுக்கு செய்கிறார். அங்குள்ள எம்.பி.க்கள் சிறிசேனாவுக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள்.

எங்களுக்கு எதிராக இலங்கை அரசு மற்றும் சில உதிரி கட்சிகள் தமிழர்களிடம் நோட்டீஸ் கொடுக்கிறார்கள். சுவரொட்டியும் ஒட்டி வருகிறார்கள். அதற்கான விளக்கத்தை அளித்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது விடுதலை சிறுத்தைகள் செய்தி தொடர்பாளர் வன்னியரசு, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சத்ரியன், வேணுகோபால் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *