ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக ரூ. 50 கோடி பணம் – தேர்தல் ஆணையம் அதிர்ச்சி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக ரூ. 50 கோடி பணம் தயாராக இருப்பதும், கொட்டப்போகிறது பண மழை என்ற ரகசிய தகவலும் தேர்தல் ஆணையத்துக்கு தெரிய வந்துள்ளது.

இடைத்தேர்தல் என்றாலே பணம்தான் என்று சொல்லும் அளவுக்கு ஓட்டுக்கள் விலை பேசப்படுவது தெரிந்ததுதான்.

பிரபலமாக பேசப்படும் திருமங்கலம் பார்முலாதான் பண விநியோகத்தை பரவலாக்கியது. அதன் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் ஓட்டுக்கு ஆயிரம், இரண்டாயிரம் என்று விலை கூடுதலாகவே நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் குற்றம். வாங்குவதும் குற்றம் என்று தேர்தல் கமி‌ஷன் சொல்லும் சட்டம் செல்லுபடியாவதில்லை.

50 ஓட்டுக்கு ஒரு பொறுப்பாளரை நியமித்து தேர்தல் பணியை செய்யும் அரசியல் கட்சிகள் மிக எளிதாக பணத்தை விநியோகித்து விடுகின்றன. அதை தடுப்பது அவ்வளவு சுலபமல்ல என்று தேர்தல் கமி‌ஷன் தனது இயலாமையை ஒத்துக் கொண்டுள்ளன.

ஒரே ஒரு தொகுதியில் நடக்கும் தேர்தலை கட்டுப்பாட்டுக்குள் வைத்து நடத்த முடியவில்லை என்றால் நிர்வாகம் செயலற்று போனதாகத்தான் மக்களால் கருதப்படும்.

ஆர்.கே.நகரில் அரசியல் கட்சிகள் வீடு வீடாக கணக்கெடுக்கும் பணியை முடித்து விட்டனர். அவர்களில் எந்தெந்த கட்சியினர் எவ்வளவு பேர்? பணத்தால் எத்தனை பேரை மாற்ற முடியும்? என்ற கூடுதல் விபரங்களையும் சேகரித்து வைத்து இருக்கிறார்கள்.

வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக ரூ.50 கோடி பணம் அரசியல் கட்சியினரிடம் தயாராக இருப்பதாக மாநில உளவுப் பிரிவு போலீசார் தகவல் அறிந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.

ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை வாக்காளர்களுக்கு கொடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

குறைந்தபட்சம் 70 ஆயிரம் வாக்காளர்களை பணம் கொடுத்து வளைக்க முக்கியமான கட்சிகள் முடிவு செய்துள்ளன.

மொத்தம் 2 லட்சத்து 62 ஆயிரம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதில் 75 சதவீதம் வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கிறார்கள். 70 ஆயிரம் வாக்குகள் பெறுபவர் வெற்றி வாகை சூடுவார்.

கட்சிகளுக்கு குறிப்பிட்ட சதவீதம் ஓட்டுகள் கிடைக்கும். அதற்கு மேல் ஒரு குறிப்பிட்ட சதவீதம் வாக்குகளை பெற்றுவிட்டால் வெற்றி பெற்றுவிடலாம் என்பதுதான் இந்த கட்சிகள் போடும் கணக்கு. அதற்காகத்தான் குறிப்பிட்ட சதவீத வாக்காளர்களை பணத்தை கொடுத்து கணக்கு பண்ணுகிறார்கள்.

சாமானிய மக்கள் பலர் பணத்தை எதிர்பார்க்கும் மனநிலையிலேயே இருக்கிறார்கள். யார் எவ்வளவு தருவார்கள் என்ற எண்ணம் அவர்களிடம் இருக்கத்தான் செய்கிறது. ஒரு வீட்டில் 5 ஓட்டுகள் இருந்தால் குறைந்தபட்சம் 25 ஆயிரம் வரை கிடைப்பதாக இருந்தால் சாதாரண ஏழைகள் எப்படி மறுப்பார்கள்?

கண்டிப்பாக பணம் கொடுப்பார்கள் என்பதும், ரூ. 50 கோடி பணம் தயாராக இருக்கிறது என்பதும், கொட்டப்போகிறது பண மழை என்ற ரகசிய தகவலும் தேர்தல் ஆணையத்துக்கு தெரிந்து விட்டது.

நான் கொடுக்கிறேன். நீ தடுத்துப் பார் என்ற ரீதியில் கட்சிகள் களம் இறங்கி இருக்கின்றன. தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடியுமா? என்பதுதான் இப்போதைய சூடான விவாதமாகி இருக்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *