முஸ்லிம்கள் மீதான தாக்குதலின் சூத்திரதாரிகளை எமக்குத் தெரியும்! – ஹக்கீம் தெரிவிப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
“முஸ்லிம்கள் மீது இப்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் தாக்குதல்கள் எங்கிருந்து வருகின்றன என்று எமக்குத் தெரியும். ஆனால், அவை வெளியில் சொல்லமுடியாத அளவுக்குப் பாரதூரமானவை.”
– இவ்வாறு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:-
“மஹிந்தவின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் உச்சத்தில் இருந்ததாலேயே அவரது ஆட்சி கவிழ்ந்தது. தமிழ்  முஸ்லிம் மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய ஆட்சியாக அந்த ஆட்சி இருக்கவில்லை என்பதால்தான் அவர்கள் இந்த ஆட்சியைத் தெரிவுசெய்தனர். ஆனால், இந்த ஆட்சியிலும் இனவாதத் தாக்குதல்கள் தொடர்வது மிகுந்த கவலையளிக்கின்றது.
ஒவ்வொரு நாளும் விடியும்போது எங்காவது ஒரு கடை எரிக்கப்பட்டிருக்கின்றது. இதை எவர் செய்கிறார்கள்? என்ன நோக்கத்தில் செய்கிறார்கள்? என்று புலனாய்வுத்துறை அறிந்திருக்கவேண்டும். அறியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. அப்படி அறிந்திருக்கவில்லை என்றால் புலனாய்வுத்துறை மதிப்பிழக்கின்றது என்றே அர்த்தம்.
தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று பொலிஸார் கூறினாலும் தாக்குதல்கள் தொடரவே செய்கின்றன. சூத்திரதாரிகள் இன்னும் கைதுசெய்யப்படவில்லை. இந்தத் தாக்குதல்கள் எல்லாம் எங்கிருந்து வருகின்றன என்று எமக்குத் தெரியும். ஆனால், வெளியே சொல்லமுடியாத அளவுக்கு அவை  பாரதூரமானவை.
நாட்டைக் குழப்பி மீண்டும் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு சதி நடவடிக்கை இது என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. அரசு இதைக் கட்டுப்படுத்தவேண்டும்; சம்பந்தப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்; பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கப்படவேண்டும்.
சிறுபான்மை இன மக்கள் அதிக நம்பிக்கை வைத்தே இந்த அரசை உருவாக்கினர். அவர்கள் நம்பிக்கையை இழந்துவிடக்கூடாது. அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கவேண்டிய பொறுப்பு இந்த அரசுக்குண்டு.
இன்று இரவானதும் முஸ்லிம்கள் அச்சத்தில் மூழ்கின்றனர். இன்று எந்தக் கடை எரிக்கப்படுமோ என்ற அச்சத்தில் வர்த்தகர்கள் உள்ளனர். இந்த நிலைமையை அரசு மாற்ற வேண்டும்” – என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *