ஐ.நா. தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கைக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுப்பது எவ்வாறு? – பிரிட்டன் தூதுவருடன் சம்பந்தன் பேச்சு 

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஜேம்ஸ் டோரிஸுக்கும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்குமிடையில் நேற்று முக்கிய சந்திப்பு நடைபெற்றது.

கொழும்பிலுள்ள பிரிட்டன் தூதுவர் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இரா.சம்பந்தனுடன் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பியும் கலந்துகொண்டார்.

இந்தச் சந்திப்பு தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவிக்கையில்,

“ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 2015ஆம் ஆண்டு இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கும் 341 என்ற தீர்மானத்தை அமுல்படுத்த இலங்கை அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது.

ஜெனிவாவில் நடைபெற்றுவருகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 36ஆவது கூட்டத்தொடரில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற  அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜெனிவாவுக்கான பிரிட்டன் பிரதிநிதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான பிரிட்டனின் இந்த நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது என பிரிட்டன் தூதுவரிடம் நாம் தெரிவித்தோம்.

சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டமீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறலை உறுதி செய்ய நம்பகமான நடவடிக்கைகளை இலங்கை எடுக்காதது, சர்வதேச சட்ட நடவடிக்கைகளுக்கு இன்னும் அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல்ஹுசைன், ஜெனிவாவில் நடைபெற்றுவருகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 36ஆவது கூட்டத்தொடரின் ஆரம்ப உரையில் கூறியிருந்தார். அவரின் கருத்தையும் இலங்கை அரசுக்கு ஐ.நா. ஆணையாளர்  விடுத்துள்ள எச்சரிக்கையையும்  கூட்டமைப்பு வரவேற்கின்றது என்பதையும் பிரிட்டன் தூதுவரிடம் கூறினோம்.

ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த எடுக்கவேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்தும், இதற்காக இலங்கை அரசுக்கு சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து எவ்வாறான அழுத்தங்கள் கொடுப்பது தொடர்பிலும் பிரிட்டன் தூதுவருடனான சந்திப்பில் பேசினோம்.

பிரிட்டன் தூதுவர் ஜேம்ஸ் டோரிஸ் வடக்குக்கு அண்மையில் விஜயம்செய்திருந்தார். அந்த விஜயத்தில் கவனித்த விடயங்கள் தொடர்பிலும் பிரிட்டன் தூதுவர் இந்தச் சந்திப்பில் எம்முடன் பேசினார்.

தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது பேசினோம்.
இந்தச் சந்திப்பு திருப்திகரமான  முக்கிய சந்திப்பாக அமைந்தது” – என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *