காணாமல்போனோர் அலுவலகத்தால் இராணுவத்துக்குப் பாரிய அச்சுறுத்தல் என்கிறார் திஸ்ஸ விதாரண!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

காணாமல்போனோர் தொடர்பாக அமைக்கப்படவுள்ள அலுவலகம் யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினருக்குப் பாரிய அச்சுறுத்தலாக உள்ளதென லங்கா சமசமாஜக் கட்சி கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

காணாமல்போனோர் தொடர்பாகக் கண்டறிவதற்கு அமைக்கப்படவுள்ள அலுவலகத்தின் ஊடாக நாட்டின் எந்தவொரு நபருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க முடியும் என அக்கட்சியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண குறிப்பிட்டுள்ளார்.

இந்த அலுவலகத்தின் பரிந்துரைகள் சர்வதேச நீதிமன்றங்களிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினருக்கே அச்சுறுத்தல் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் தீர்மானங்களுக்கு அன்று வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர கைச்சாத்திட்டிருந்தார்.

அந்தத் தீர்மானத்தின் அடிப்படையிலேயே தற்போது காணாமல் போனோர் தொடர்பாக கண்டறியும் அலுவலகத்தை அமைக்கும் சட்டத்தில் ஜனாதிபதி கைச்சாத்திட்டுள்ளார்.

இந்த அலுவலகம் ஊடாக நாட்டில் எவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க முடியும். குறிப்பாக யுத்தத்தை வென்ற இராணுவத்தினர் மீது சர்வதேச நாடுகள் பொய்க் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகின்றன.

இந்தநிலையில், இந்த அலுவலகம் ஊடாக இராணுவத்தினர் சர்வதேச நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட வாய்ப்பு இருக்கின்றது. ஏனெனில், குறித்த அலுவலகத்தின் பரிந்துரைகளை சர்வதேச நீதிமன்றங்கள்அங்கீகரிக்கின்றன.

அமைக்கப்படவுள்ள காணாமல்போனோர் தொடர்பாக கண்டறியும் அலுவலகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றுக்கொள்வதற்குத் தேவை ஏற்படின் வெளிநாட்டவர்களை அழைத்துக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகத்தின் விசாரணைகளில் ஒருவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால் அதற்கெதிராக மேன்முறையீடு செய்யவும் முடியாது. பொதுவாக நீதிமன்றம் ஒன்றில் ஒருவர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர் மேல்முறையீடு செய்வதற்கு அவகாசம் இருக்கின்றது.

ஆனால், இதில் அந்த உரிமை இல்லை. அதனால் குறித்த அலுவலகம் நீதிமன்றத்தையும் விட உயர்நிலையில் அமைக்கப்படவுள்ளது. அரசு இந்த உண்மை நிலைமைகளை மறைத்து வருகின்றது” – என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *