“ஆட்சியைக் கவிழ்ப்பதற்குரிய காலம் கனிந்துவிட்டது. எனவே, சரியான நேரத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவோம்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
2017ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்க்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சூளுரைத்திருந்தார். அதுபற்றி ஆங்கில ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
“நாட்டில் தற்போது நடப்பவற்றைப் பார்க்கையில் ஆட்சியைக் கவிழ்க்கும் அந்தத் தருணத்தை நோக்கி விடயங்கள் நகர்வதை அனைவராலும் உணரக்கூடியதாக இருக்கின்றது.
அதிகாரம் எவ்வாறு கைமாறும் என்பது தொடர்பில் என் அளவுக்கு அறிந்துவைத்துள்ள எவரும் இருக்கமுடியாது. எம்மிடமிருந்து ஆட்சி நழுவிச்செல்லவில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் உத்தியோகப்பூர்வ முடிவு வரும் முன்னமே நான் வீட்டுக்குச் சென்றுவிட்டேன்.
தற்போது எங்களது கைகளுக்கு பிடி வந்துள்ளது. எந்த நேரத்தில் எவ்வாறான அணுகுமுறைகளை மேற்கொண்டு ஆட்சியைக் கவிழ்க்கவேண்டும் என்ற விடயத்தை நாம் மிக நுணுக்கமாக கையாள்கிறோம். சரியான நேரத்தில் சரியான தீர்மானத்தை மேற்கொண்டு ஆட்சியை மாற்றுவோம்.
நான் ஜனநாயகத்தை மதிக்கும் தலைவன் என்ற வகையில் இந்த விடயத்தை மிகவும் கவனமாக அணுகுகிறேன்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





