பிணைமுறி மோசடியாளர்களுக்கு உடன் தண்டனை வழங்கவேண்டும்! – சு.கவின் அமைச்சர்கள்  ஜனாதிபதிக்கு அழுத்தம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணைமுறி மோசடி விவகாரத்தில் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சிலர் பின்புலமாக இருந்ததாகத் தகவல்கள் அம்பலமாகியுள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கையை எடுக்கவேண்டும்  என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள அமைச்சர்கள் சிலர் அழுத்தம் கொடுத்துவருகின்றனர் எனத் தெரியவருகின்றது.
பிணைமுறி மோசடி விவகாரத்தில் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்கள் பின்புலமாக இருந்துள்ளனர் என்று குறித்த விடயம் தொடர்பில் விசாரணை செய்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததையடுத்து அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, சம்பிக்க ரணவக்க ஆகியோர் ரவி கருணாநாயக்க உடனடியாக பதவி விலகவேண்டும் என்று பகிரங்கக் கோரிக்கையை விடுத்திருந்தனர். அத்துடன், ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக்  கொண்டுவர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாராகிவருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், ரவி கருணாநாயக்க மீது வெறும் குற்றச்சாட்டுகள் மாத்திரமே சுமத்தப்பட்டுள்ளன எனவும், அது தொடர்பில் இறுதித் தீர்மானம் வெளியாகும்வரை எந்தவொரு நம்பிக்கையில்லாப் பிரேரணையையும்  ஐக்கிய தேசியக் கட்சி தோற்கடிக்கும் எனவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாஸீம் கூறியிருந்தார்.
இந்நிலையில், பிணைமுறி விவகாரத்தின் குற்றவாளிகளுக்கு எதிராக ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சு.கவின் அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தம் கொடுத்துவருகின்றனர் எனத் தெரியவருகின்றது.
இந்த விடயத்தில் மக்கள் பெரும் அதிருப்தியடைந்துள்ளதால் ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுத்தேயாகவேண்டுமென இவர்கள் ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளனர் எனவும் அறியமுடிகின்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *