ரவிராஜ் கொலை விவகாரம்: நேவி சம்பத்திற்கு பிடியாணை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலையின் பிரதான சந்தேகநபரான நேவி சம்பத்திற்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) இவ் உத்தரவை பிறப்பித்துள்ளது.

ரவிராஜ் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்த ஐந்து சந்தேகநபர்களும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 24ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்ற ஜூரிகள் சபையால் விடுவிக்கப்பட்டனர்.

இதற்கு எதிராக ரவிராஜின் பாரியாரால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்தே இப் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக துணிந்து குரல்கொடுத்து வந்த நடராஜா ரவிராஜ், கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பத்தாம் திகதி கொழும்பு நாரஹென்பிட்ட பகுதியில் இனந்தெரியாதோரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். குறித்த கொலை தொடர்பாக கடந்த 10 வருடங்களாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையிலேயே சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்டனர். மேல் நீதிமன்றத்தின் இத் தீர்ப்பிற்கு எதிராக, ரவிராஜின் பாரியாருக்கு மேலதிகமாக சட்டமா அதிபரும் மேன்முறையீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *