முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழர்கள் ஓரணியாக நாளை சுடரேற்றுவோம்! – சம்பந்தன் அழைப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

“தமிழ் மக்கள் அனைவரும் நாளைய தினம் ஓரணியில் நின்று, அரச படைகளால் முள்ளிவாய்க்காலில் ஈவிரக்கமின்றிக் கொல்லப்பட்ட எமது உறவுகளை சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தி நினைவுகூரவேண்டும்.”

– இவ்வாறு கேட்டுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

ஈழத்தில் அரச படைகளால் தமிழ் மக்கள் மீது அரங்கேற்றப்பட்ட மிகப்பெரும் படுகொலையை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 8ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ளது. இந்நிலையிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“இறுதிப் போரில் பெருந்தொகையான தமிழ் மக்கள் அரச படைகளின் கண்மூடித்தனமான தாக்குதல்களில் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டனர். அதேவேளை, தமிழ் மக்கள் பலர் காணாமல் ஆக்கப்பட்டனர்.

வன்னியில் கண்காணிப்பு நடவடிக்கைளில் ஈடுபட்டு மக்களுக்கு உதவிகளை வழங்கிவந்த சர்வதேச நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள் ஆகியன போரின் உச்சக்கட்டத்தில் அங்கிருந்து அரச படைகளால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டன. இதனால் சர்வதேச சாட்சியங்கள் எதுவுமின்றி சர்வதேச போர்விதிகளுக்கு முரணாக இறுதிப் போர் நடைபெற்றது.

இறுதிப் போரில் அரச படைகளின் ஆயுதங்களால் மட்டுமன்றி, உணவுகள் இல்லாமலும், மருந்துகள் இல்லாமலும், பாதுகாப்பாகத் தங்குவதற்கு இடங்கள் இல்லாமலும் எமது மக்கள் பலர் சாகடிக்கப்பட்டனர்.

மஹிந்த ஆட்சியில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் திட்டமிட்ட கொடூரத் தாக்குதல்கள் தொடர்பில் அப்போது நான் நாடாளுமன்றில் பல உரைகளை ஆற்றியிருந்தேன். போரை உடன் நிறுத்தும்படியும் ஆட்சியில் இருந்த அரசைக் கேட்டிருந்தேன். ஆனால், தமிழ் மக்களுக்குப் பாரிய இழப்புகளைக் கொடுத்துத்தான் அரசு போரை முடிவுக்குக் கொண்டுவந்தது.

இதனால் பெருந்தொகையான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்; பலர் காணாமல் ஆக்கப்பட்டனர். எமது மக்களின் சொந்த வீடுகள், சொத்துகள் அழிக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தருமாறு சர்வதேசத்தை இன்று நாம் கோரி நிற்கின்றோம்.

நாளை மே 18ஆம் திகதி. நாளைய நாள் தமிழருக்கு தேசிய துக்க நாள்; அரச படைகளால் எமது இனம் திட்டமிட்டு ஈவிரக்கமின்றி சிதைக்கப்பட்ட நாள்; இழந்த எமது உறவுகளை சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தி நினைவுகூரும் நாள். எனவே, தமிழர்களாகிய நாம் அனைவரும் நாளைய தினம் ஓரணியில் நின்று இதனைச் செய்யவேண்டும்.

இவ்வாறு நாம் செய்வதன் ஊடாக போரின்போது உயிரிழந்த எமது மக்களின் ஆத்மா சாந்தியடையும்” – என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *