குப்பை மேடு சரிவு விபத்தில் 28 பேர் பலி: 30 பேர் மாயம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

புதுவருடப் பிறப்பு தினமான கடந்த 14ஆம் திகதி மாலை 3 மணியளவில் வெல்லம்பிட்டிய மீதொட்டமுல்ல பிரதேசத்தில் குவிக்கப்பட்டிருந்த பாரிய குப்பை மேட்டு மலையின் ஒரு பகுதி வீடுகள் மீது சரிந்தது.

இந்த சம்பவத்தில் பல வீடுகள் குப்பையில் மூடப்பட்டதோடு உடனடியாக மீட்பு பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன.

கடந்த 14ஆம் திகதி முதல் இன்றைய தினம் வரை இடம்பெற்ற மீட்புப் பணிகளில் 28 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனர்;த்தத்தில் 228 குடும்பங்களைச் சேர்ந்த 980 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் காயமடைந்து தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

79 வீடுகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, 17 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இந்த விபத்தில் இடம்பெயர்ந்த 26 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன் அவர்கள் தற்போது பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

மீதொட்டமுல்ல பகுதியில் விண்ணைத்தொடும் அளவுக்கு நிரப்பிவைக்கப்பட்டுள்ள குப்பை மேடுகளை அங்கிருந்து அகற்றி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளில் கொண்டுசெல்லுமாறு கோரி அப்பகுதி மக்களால் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை மூன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த ஜனவரி மாதம் 11ஆம் திகதி, மார்ச் மாதம் 6ஆம் திகதி மற்றும் அதே மாதத்தில் 25ஆம் திகதி இவ்வாறு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

நாடாளுமன்றத்திலும் இந்தப் பிரச்சினை தொடர்பாக மீதொட்டமுல்ல பிரதேச மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி உறுப்பினர்கள் குரல் எழுப்பியிருந்தனர்.

பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்ட போதிலும் கோரிக்கையை முன்வைத்து போராடிய மக்களுக்கு நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகமே பதிலாக கிடைக்கப்பெற்றன.

இப்படியான சூழ்நிலையில் விபத்து இடம்பெற்று 28 பேரை குப்பை மேடு பலியெடுத்திருக்கும் நிலையில், குறித்த பகுதியில் மேலும் குப்பைகளை இடக்கூடாது என்ற முடிவை ஸ்ரீலங்கா அரசாங்கம் எடுத்துள்ளது.

இந்த அனர்த்தம் குறித்து விசாரணை நடத்தி 5 தினங்களில் அறிக்கையை சமர்பிக்கும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நேற்றைய தினம் பணிப்புரை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும் அனர்த்தம் இடம்பெற்ற பகுதியில் தொடர்ச்சியாக மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *