நவம்பர் கடைசி வாரத்தில் கலப்பு முறையில் தேர்தல்: சிறு கட்சிகளின் போராட்டம் வெற்றி : அமைச்சர் மனோ கணேசன்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நாடு முழுக்க உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் இறுதி வாரத்தில் நடைபெறுவதற்கான சாத்தியம் இன்று மாலை அலரி மாளிகையில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளான அமைச்சர்கள் நிமல் சிறிபால சில்வா, ரவுப் ஹகீம், மனோ கணேசன், ரிசாத் பதுதின், கபீர் ஹசிம், பைசர் முஸ்தபா, லசந்த அழகியவன்ன, அஜித் பெரேரா, அனுரகுமார திசாநாயக்க, எம். ஏ. சுமந்திரன் மற்றும் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய, சட்டமா அதிபர் ஆகியோர் கலந்துக்கொண்ட கூட்டத்தில், உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலத்திற்கான உத்தேச திருத்த விதிகள் தொடர்பில் ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.

இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி-தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் கூறியுள்ளதாவது,

கடந்த தேர்தல்கள் நடைபெற்ற ஒட்டுமொத்த விகிதாசார முறைமை கைவிடப்பட்டு தேர்தல்கள் புதிய வட்டார, விகிதாரா கலப்பு முறையில் நடைபெறும். இது தொடர்பில் கடந்த மகிந்த ஆட்சியில் 2012ம் வருடம் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தில் வட்டார, விகிதாசார தெரிவுகள் தொடர்பாக இருந்த 70:30 என்ற கணக்கு, எமது புதிய திருத்த சட்டத்தில் 60:40 ஆக மாற்றப்படும். அதேபோல் இரட்டை அங்கத்தவர் வட்டாரத்தில், ஒரே கட்சியில் இரண்டு வேட்பாளர்கள் போட்டியிட முடியாது என்றும், இரண்டாம் அங்கத்தவராக வெற்றி பெறுகின்றவர், தோல்வியடைந்த கட்சிகளில் அதிக வாக்குகளை பெற்றவராக இருத்தல் வேண்டும் என்ற மோசடித்தனமான பழைய விதி மாற்றப்பட்டு, ஒரே கட்சியே இரண்டு வேட்பாளர்களை போட்டியிட செய்ய முடியும் என்ற திருத்தம், புதிய திருத்த சட்டத்தில் வரும். அத்துடன் இரட்டை அங்கத்தவர் வட்டாரத்தில் ஒவ்வொரு வாக்காளரும், இரண்டு வாக்குகளை அளிக்க முடியும். இவை சிறுபான்மை கட்சிகள் சார்பாக நாம் தொடர்ச்சியாக முன்னெடுத்த போராட்டத்தின் மூலம் கிடைத்த வெற்றிகளாகும்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *