மைத்திரி – டிரம்ப் அடுத்த மாதம் நேரில் பேச்சு!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

 

ஐக்கிய நாடுகள் சபையின் 72ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பையும் மைத்திரிபால சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐ.நாவின் தலைமையகத்தில் அடுத்த மாதம் 12ஆம் திகதிமுதல் 25ஆம் திகதிவரை 72ஆவது பொதுச் சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதன் நிமிர்த்தம் அடுத்த மாதம் 19ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால அமெரிக்காவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதியுடன் புதிய வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான உயர்மட்டக் குழுவொன்றும் செல்லவுள்ளது.

2015ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் அவர் கலந்துகொள்ளும் மூன்றாவது ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தொடராக இது அமையவுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உட்பட அரச தலைவர்கள் பலரை இந்தப் பயணத்தின்போது மைத்திரிபால சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப தெரிவுசெய்யப்பட்ட பின்னர் இதுவரை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடவில்லை. ஐ.நா. பொதுச் சபைக்கு கூட்டத்தொடரோடு டிரம்புடன் நடக்கவுள்ள இந்தக் கன்னிச் சந்திப்பில் இலங்கை அமெரிக்காவுக்கிடையிலான அரசியல், சமூக, பொருளாதார உறவுகள் மற்றும் இராஜதந்திர நகர்வுகள் குறித்து மைத்திரிபால பேசுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கையில் போர்க்குற்ற விசாரணையை நடத்துவதற்கான தீர்மானத்தை இலங்கை அரசின் இணை அனுசரணையுடன் அமெரிக்கா கொண்டுவந்து வாக்கெடுப்பின்றி நிறைவேற்றியிருந்தது. அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தலைமையிலான அரசு இலங்கையின் போர்க்குற்ற விசாரணை பொறிமுறை குறித்து அதீத அக்கறை செலுத்தியிருந்தது. ஆனால், டிரம்ப் தலைமையிலான தற்போதைய அமெரிக்க அரசு இதுவரை இலங்கை குறித்து தனது தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை என்பது கோடிட்டுக் காட்டவேண்டிய விடயமாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *