மைத்திரி மீது மஹிந்த அணி கடுகளவேனும் விசுவாசமில்லை! – நாமல் கூறுகின்றார் 

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
“நாட்டின் ஜனாதிபதி என்ற அடிப்படையில் மைத்திரி மீது எமக்கு மதிப்பு உண்டே தவிர, அவர் மீது எமக்குக் கடுகளவேனும் விசுவாசம் இல்லை. இதனால்தான் மஹிந்த அணியால் அவரின் தலைமையை ஏற்று அவருடன் இணையமுடியாமல் உள்ளது.”
 – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:-
“எம்மைச் சிறையில் அடைத்ததையும் பொருட்படுத்தாது  எம்மை அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கியதையும் பொருட்படுத்தாது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் அவருடன்  இணைந்து செயற்பட்டோம். அவரது தலைமையின்கீழ் போட்டியிட்டோம்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியை நிறுவும் நோக்கில்தான் நாம் அந்தத் தேர்தலில் போட்டியிட்டோம். ஆனால், எவர் வென்றாலும் ரணில்தான் பிரதமராக  நியமிக்கப்படுவார் என்று ஜனாதிபதி இறுதிச் சந்தர்ப்பத்தில் அறிவித்தார். அதன்படியே செய்தார். இதனால் ஜனாதிபதி மைத்திரி மீது நாம் நம்பிக்கை இழந்துவிட்டோம்.
ஆனால், அவருடன் நாம் இணைந்து செயற்படவேண்டும் என்று சிலர் விரும்புகின்றனர். அப்படி இணைவதாக இருந்தால் அவர் மீதான நம்பிக்கையின்மையுடன்தான் இணையவேண்டும். அது வெற்றிகரமான இணைவாக இருக்காது.
இப்போது இந்த அரசுக்கு எதிராக  இந்த அரசின் மக்கள் விரோத  தேச விரோத கொள்கைக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர். இந்நிலையில், எம்மால் அரசுடன் இணையமுடியாது; அரசுடன் இணைந்து தேர்தல்களில் போட்டியிட முடியாது.
நாம் அரசுடன் இணைந்தால் அம்பாந்தோட்டையை சீனாவுக்கு விற்கும் அரசின் முடிவை எம்மால் எப்படி எதிர்க்கமுடியும்? அரச சொத்துகளை விற்கும் திட்டத்தை எப்படி எதிர்க்கமுடியும்? ஜெனிவாத் தீர்மானத்தை எப்படி எதிர்க்கமுடியும்? இப்படியானதொரு நிலைமையில் எப்படி எம்மால் அரசுடன் இணைந்து மக்களிடம் செல்வது?” – என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *