வலுக்கின்றது சு.கவின் உட்கட்சிப்பூசல்! கேள்விக்குறியில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை!! 

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
புதிய அரசமைப்பு, 20ஆவது திருத்தச் சட்டமூலம் என முக்கிய சில அரசியல் நகர்வுகளுக்குச் செல்லவேண்டிய சூழலில் தேசிய அரசின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கேள்விக்குறியாகும் நிலை உருவாகியுள்ளது என அரசின் தகவல் அறியும் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்  கட்சியின் 66ஆவது தேசிய மாநாடு இன்று  ஞாயிற்றுக்கிழமை கொழும்பு கெம்பல் பார்க்கில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பொது எதிரணியிலுள்ள எவரும் கலந்துகொள்ளவில்லை. அதேவேளை, தனக்கு அழைப்பில் கிடைக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கடந்த 24ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் (திருத்த) சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருந்த வேளையில் அரச தரப்பு சார்பில் 120 வாக்குகள் ஆதரவாக அளிக்கப்பட்டிருந்தன. குறித்த வாக்கெடுப்பில் பொது எதிரணிக்குத் தாவவுள்ளனர் எனக் கூறப்படும்  சு.கவின் 17 உறுப்பினர்களும் வாக்கெடுப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை.
அதேபோல் இவர்கள்தான் தேசிய அரசிலிருந்து சு.க. வெளியேறவேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றனர். இந்நிலையில், குறித்த 17 பேரில் சிலர் கட்சியின் இன்றைய மாநாட்டிலும் கலந்துகொள்ளவில்லை என்று அறியமுடிகின்றது.
ஏற்கனவே பொது எதிரணியிலுள்ள சு.கவின் 7 பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கட்சியின் மத்திய குழு ஒப்புதல் அளித்துள்ளது. கட்சியின் மாநாடு இன்று நிறைவடைந்ததையடுத்து அதிரடியான சில நடவடிக்கைகளை சு.க. எடுக்கவுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை மையப்படுத்தி  17 பேர் விரைவில் தன்னுடன் இணைவர் என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார். சு.கவின் 17 உறுப்பினர்களும் தேசிய அரசிலிருந்து விலகினால் அரசின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை சிதைந்துவிடும்.
புதிய அரசமைப்பு, 20ஆவது திருத்தங்களில் அரசை ஆட்டங்காணவைக்கக்  காத்திருக்கும் மஹிந்தவின் நகர்வுகளுக்குத் தீனிபோடும் வகையில் சு.கவில் உட்கட்சி பூசல் அதிகரித்து வருகின்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *