பெரும்பான்மை சமூகத்துடன் கூட்டமைப்பிற்கு சரியான தொடா்பாடல் இல்லை: சி.வி.

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பெரும்பான்மை சமூகத்துடன் கூட்டமைப்பிற்கு சரியான தொடா்பாடல் இல்லையென குறிப்பிட்டுள்ள வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் ஏனைய மொழி பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குகூட சரியாக தெரிவிக்கப்படுவதில்லையென குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் பெரும்பான்மையாக சிங்களம் பேசும் உறுப்பினர்கள் இருக்கும் போது, தமிழில் எமது பிரச்சினைகளை எடுத்துரைப்பதால் எவ்வித பிரயோசனமும் இல்லையென்றும், சமூகங்களுக்கிடையிலான பிரச்சினைகளை பரிமாற்றிக்கொள்ள கூட்டமைப்பின் தலைமைத்துவம் சரியான நடவடிக்கையொன்றை எடுக்க வேண்டுமெனவும் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார். தேசிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இதுவே வழியென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து இன்று (புதன்கிழமை) வெளியாகியுள்ள ஆங்கில நாளேடு ஒன்றிற்கு அவர் வழங்கியுள்ள செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கூட்டமைப்பிற்கு வேறு தலைமைத்துவம் அவசியம் என அண்மையில் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தமை தொடர்பாக வினவியபோது, தமிழ் அரசியல் நிலைத்திருப்பதற்கு ஒற்றுமையே அவசியம் என்றும், பிரிந்து நிற்பதானது வீழ்ச்சிக்கே வழிவகுக்கும் என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, தமிழர்களின் எதிர்கால அரசியல் பாதுகாப்பான நிலையில் உள்ளதென்றும், சில விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, சுவிட்ஸர்லாந்து, பெல்ஜியம் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் காணப்படுவதைப் போன்று சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வுக்காகவே தாம் வாதாடுவதாக, குறித்த செவ்வியில் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, வடக்கு கிழக்கு மீண்டும் இணைக்கப்பட்டால், ஏனைய மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் வழங்கப்படும் உரிமைகள் யாவும் வடக்கு கிழக்கில் வாழும் சிங்களவர்களுக்கும் வழங்கப்படுமென வடக்கு முதல்வர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *