பொன்சேகாவுக்கு பதவி வழங்க முடியும் என்றால் எனக்கு என் வழங்க முடியாது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

“நாடாளுமன்றத் தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராகப் பிரசாரம் செய்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு கட்சியில் உயர் பதவி வழங்க முடியுமென்றால், 30 வருடங்களாக கட்சிக்காகப் பாடுபட்ட தனக்கு ஏன் மீண்டுமொரு சந்தர்ப்பத்தை வழங்கக்கூடாது?

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

இளைஞர் பருவத்திலேயே ஐ.தே.கவுடன் இணைந்து அரசியல் பயணத்தை ஆரம்பித்த திஸ்ஸ அத்தநாயக்க காலப்போக்கில் அக்கட்சியின் முக்கிய பதவிகளுள் ஒன்றான பொதுச் செயலாளர் பதவியை வகித்தார். கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்துக்கு எதிராக கட்சிக்குள் போர்க்கொடி தூக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் தலைமைக்கு விசுவாசமாகச் செயற்பட்டார்.

எனினும், 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சிலிருந்து வெளியேறி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்கி அவருக்கு சார்பாக தீவிரப் பரப்புரையை முன்னெடுத்தார். தான் ஆரம்பத்தில் அங்கம் வகித்த ஐ.தே.க. மீதும் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகக் களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்ற பின்னர் திஸ்ஸ அத்தநாயக்கவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியானது. மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் இணைவதற்கு கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டார். இதற்காக நாடாளுமன்றத் தேர்தலின்போது அவர் எதிரணிக்கு சார்பாக பிரசாரம் செய்வதில் மதில்மேல் பூனை என்ற நிலைப்பாட்டையே கடைப்பிடித்து வந்தார். அதன்பின்னர் நடைபெற்ற எதிரணியின் கூட்டங்களை முடிந்தளவு தவிர்த்தே வந்தார்.

இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப் பின்னர் திஸ்ஸவுக்கான கதவை ஐக்கிய தேசியக் கட்சி திறந்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஐ.தே.கவின் தற்போதைய பொதுச் செயலாளரான அமைச்சர் கபீர் ஹாசீம்கூட கருத்து வெளியிட்டிருந்தார். “திஸ்ஸ அத்தநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணையலாம்” என்பதே அமைச்சர் கபீரின் கருத்தின் சுருக்கமாகும்.

சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் பதவிகளில் அதிரடி மாற்றங்கள் இடம்பெறவுள்ளன. அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் திஸ்ஸ அத்தநாயக்க ஐ.தே.கவில் மீண்டும் இணைந்து தனது அரசியல் பயணத்தை ஆரம்பிப்பார் என கொழும்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகின்றது.

இது குறித்து திஸ்ஸ அத்தநாயக்கவிடம் தமிழ்ப் பத்திரிகை ஒன்று வினவியுள்ளது.

அதற்குப் பதிலளித்துள்ள அவர்,

“ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் சாதகமான முறையில் கருத்து வெளியிட்டுள்ளார். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நண்பரும் இல்லை. சில வேளைகளில் அரசியல் சூழ்நிலைக்கேற்ப முக்கிய முடிவுகளை எடுக்கவேண்டிய நிலை ஏற்படும். அது சரியாக இருக்கலாம். பிழைத்தும் போகலாம். அந்தவகையில், 2015ஆம் ஆண்டு நான் எடுத்து முடிவு குறித்து கவலை இருக்கத்தான் செய்கின்றது. ஆனால், இது அரசியல் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சிக்காகப் பல வருடங்கள் உழைத்துள்ளேன். நெருக்கடியான சந்தர்ப்பங்களில் எல்லாம் கட்சியுடன் இருந்துள்ளேன். எனவே, மீண்டுமொரு வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டால் அதை நிச்சயம் ஏற்பேன். ஆனால், மன்னிப்புக் கேட்கமாட்டேன். ஏனெனில, முன்கூட்டியே கூறியதுபோல் இது ஒரு அரசியல் முடிவாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச வேண்டியுள்ளது. அந்தப் பேச்சின் பின்னரே அடுத்த கட்டம் பற்றி அறிவிக்கப்படும்.

குறிப்பாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தீவிர பிரசாரம் செய்தார். இந்நிலையில், அவருக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் உயர் பதவி வழங்க முடியும் என்றால், எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவது நியாயமாகத்தானே இருக்கும்” – என்று கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *