டெல்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அபார வெற்றி – வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

டெல்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அபார வெற்றியை தேடித் தந்த வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

டெல்லி மாநகராட்சி முன்பு ஒரே மாநகராட்சியாக இருந்தது. 2012-ம் ஆண்டு வடக்கு, தெற்கு, கிழக்கு என 3 மாநகராட்சியாக பிரிக்கப்பட்டது.

டெல்லியில் உள்ள 3 மாநகராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 23-ந்தேதி நடந்தது. இந்த 3 மாநகராட்சிகளிலும் மொத்தம் 272 வார்டுகள் உள்ளன. வடக்கு டெல்லி மற்றும் தெற்கு டெல்லி மாநகராட்சியில் தலா 104 வார்டுகளும், கிழக்கு டெல்லியில் 64 வார்டுகளும் உள்ளன.

இதில் 2 வார்டுகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. 270 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடந்தது. தெற்கு டெல்லியில் 104 வார்டுகளுக்கும், வடக்கு டெல்லியில் 103 வார்டுகளுக்கும், கிழக்கு டெல்லியில் 63 வார்டுகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது. மொத்தம் 54 சதவீத வாக்குப்பதிவாகி இருந்தது.

டெல்லி மாநகராட்சி தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்பட்டன. ஓட்டு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே பா.ஜனதா முன்னிலையில் இருந்து வந்தது. நேரம் செல்ல செல்ல அந்த கட்சி அதிகமான இடங்களில் முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில், டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகியவற்றை பின்னுக்கு தள்ளிவிட்டு டெல்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. வடக்கு டெல்லி மாநகராட்சிக்குட்பட்ட 66 தொகுதிகளிலும், தெற்கு டெல்லி மாநகராட்சிக்குட்பட்ட 66 தொகுதிகளிலும், கிழக்கு டெல்லி மாநகராட்சிக்குட்பட்ட 48 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது.

தேர்தல் நடந்த மொத்தம் 270 வார்டுகளில் பாரதிய ஜனதா 180 இடங்களை கைப்பற்றி அசைக்க முடியாத வெற்றியை பெற்றது. இரண்டாம் இடத்தை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் 46 வார்டுகளில் வெற்றி பெற்று 2-வது இடத்தை பிடித்துள்ளனர். காங்கிரஸ் 30 வார்டுகளையும் கைப்பற்றின.

டெல்லியில் உள்ள 3 மாநகராட்சியையும் பா.ஜனதா கைப்பற்றியது. மேலும், தொடர்ந்து 3-வது முறையாக ‘ஹாட்ரிக்‘ வெற்றி பெற்று சாதனை படைத்தது.

டெல்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதாவுக்கு கிடைத்துள்ள வெற்றிகுறித்து இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் தலைவர் தலைவர் அமித்ஷா, ‘டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவு பிரதமர் மோடியின் தலைமைக்கு கிடைத்த வெற்றியாகும். இதற்காக டெல்லி மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். எதிர்மறை அரசியல் நடத்துபவர்களுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர்’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அபார வெற்றியை தேடித் தந்த வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியும் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘வாக்களித்த டெல்லி மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த மாபெரும் வெற்றிக்காக உழைத்த டெல்லி பா.ஜ.க.வினரை பாராட்டுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *