உள்ளாட்சி தேர்தல் வரும் என எதிர்பார்த்தது… சட்டசபை தேர்தலே வரப் போகுது – திமுக செயல் தலைவர் ஸ்டாலின்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

உள்ளாட்சி தேர்தல் வரும் என எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால் சட்டசபை தேர்தலே வரும் நிலை ஏற்பட்டுள்ளது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அற்ப ஆயுள் அரசு :

கோவை மாவட்டம் சூலூரில் திமுக.,வின் மாநில, மாவட்ட, மாநகர இளைஞரணி அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில், தற்போதுள்ள நிலையில் தமிழகத்தில் இடைக்கால அரசே உள்ளது. இது நிலையான அரசு கிடையாது. இவர்களுக்கு மக்களை பற்றியோ, நாட்டை பற்றியோ சிந்தனை இல்லை. அதிமுக.,வில் உருவாகி உள்ள 2 அணியில் எந்த அணி, அடுத்து ஆட்சி அமைத்தாலும் அது அற்ப ஆயுள் கொண்ட அரசாகவே இருக்கும். நம்மிடம் 89 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். கடந்த சட்டசபை தேர்தலில் 1.1 சதவீதம் ஓட்டுக்கள் குறைவாக பெற்றதாலேயே நம்மால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது.

வரப் போகுது சட்டசபை தேர்தல் :

உள்ளாட்சி தேர்தல் வரும் என எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால் தற்போதுள்ள நிலையில் சட்டசபை தேர்தலே வரும் போல் உள்ளது. கடுமையாக உழைத்தால் நமக்கு பெரிய வெற்றி காத்திருக்கிறது. நமக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அதனால் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். இளைஞரணியில் உள்ள அனைவரும் வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தீவிர பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், திமுக எம்.எல்.ஏ.,க்களை சென்னை வர அழைத்ததாக வெளியான தகவல் பொய்யானது. நான் தான் செயல் தலைவர். நான் கூறாமல் எப்படி அவசர அழைப்பு விடுக்க முடியும் என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *