ரவிக்கு ஜனாதிபதி – பிரதமர் அழுத்தம்?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் ஆகியோர் அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிணை முறி விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அர்ஜூன் அலோசியஸூடன் ரவி கருணாநாயக்க தொடர்புகளை பேணி வந்துள்ளதாகவும், சில வரப்பிரசாதங்களை பெற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முறிகள் விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரவி கருணாநாயக்கவிடம் கடந்த வாரம் விசாரணை நடத்தப்பட்டது.

எனினும் தம் மீதான குற்றச்சாட்டுக்களை அமைச்சர் ரவி கருணாநாயக்க நிராகரித்துள்ளார்.

இந்நிலையில், நாடாளுமன்றில் அமைச்சர் ரவிக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணியினர் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளதோடு, அதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவையும் நாடியுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் குறித்த பிரேரணைக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்துள்ளதோடு, பலர் ஆதரவு வழங்க தயாராக இருப்பதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நெருக்கடி நிலையை சமாளிக்கும் வகையில் ரவியை பதவி விலகுமாறு ஜனாதிபதியும் பிரதமரும் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

எனினும், ஜனாதிபதியோ பிரதமரோ தம்மிடம் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடவில்லையென அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *