‘மூதேவி ஆட்சி’க்கு ஆண்டுகள் இரண்டு! – மஹிந்த அணி கொழும்பில் நாளை போராட்டம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
தேசிய அரசின் இரண்டாண்டுப் பூர்த்தியை இலங்கைக்கு மூதேவி பிடித்த  நாளாகப்  பிரகடனப்படுத்தி கொழும்பில் நாளை வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணியை மஹிந்த அணியான பொது எதிரணி நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
கொழும்பு லிப்டன் சந்தியில் நாளை மாலை 3 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பொது எதிரணி மும்முரமாக செய்து வருகின்றது.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு அமையப்பெற்றது. அதன் பின்னர் மீண்டும் அதே வருடம் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அதிக ஆசனங்களைப் பெற்று தேசிய அரசை நிறுவியது.
ஐ.தே.கவுடன் இணைந்து ஆட்சியில் பங்கொள்ளமுடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது எதிரணி சுயாதீனாகச் செயற்பட ஆரம்பித்தது. அன்றுமுதல் இன்றுவரை தேசிய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே பொது எதிரணி செயற்பட்டுவருகின்றது.
கடந்த வருடம் ஓகஸ்ட் 18ஆம் திகதியும்  அரசுக்கு எதிரான எதிர்ப்புப் பேரணியை பொது எதிரணி நடத்தியிருந்தது. அதன் பின்னர் மக்களைத் திரட்டி கண்டியிலிருந்து கொழும்புக்கான நடைபயணப் போராட்டமொன்றையும் அரசுக்கு எதிராகப் பொது எதிரணி மேற்கொண்டிருந்தது.
இவ்வாறு அரசுக்கு எதிராகத் தொடர்ச்சியான எதிர்ப்புப்  போராட்டங்களை முன்னெடுத்துவரும் பொது எதிரணி, ஓகஸ்ட் 18ஆம் திகதியை இலங்கைக்கு மூதேவி  பிடித்த தினமாகப்  பிரகடனப்படுத்தியுள்ளது.
நாளை இடம்பெறவுள்ள இந்த எதிர்ப்புப் பேரணியில் பொது எதிரணியின் நாடாளுமன்ற, மாகாண சபை, உள்ளூராட்சி சபைகளின்  உறுப்பினர்கள், பொது எதிரணியின் ஆதரவாளர்கள்  எனப் பலருடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அவரின் குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *