அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அயராது பாடுபட்டவர் விநாயகமூர்த்தி! – இரங்கல் செய்தியில் சுமந்திரன் தெரிவிப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் மறைவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளது. இவர் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அயராது பாடுபட்டவர் என்றும் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,

“அப்பாத்துரை விநாயகமூர்த்தி நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் செயலாற்றியவர். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக மிகச் சிறப்பாகச் செயற்பட்டவர். தனது உடல்நிலையையும் கருத்தில்கொள்ளாது இதற்காக அவர் பாடுபட்டிருந்தார்.

அவரது இழப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கின்றது.

மக்கள் அவரது இல்லத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை வந்து அவருக்கு அஞ்சலி செலுத்துமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கின்றது” – என்றுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தனது 84ஆவது வயதில் கொழும்பு அப்பலோ வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் காலமானார். இறுதிக்கிரியைகள் கொக்குவிலிலுள்ள அவரது இல்லத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

சிறுநீரகப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர், கொழும்பிலுள்ள அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காது நேற்றுமுன்தினம் மதியம் அவர் காலமானார்.

அவரது உடல் அஞ்சலிக்காக கொழும்பில் நேற்று மாலை வரையில் ஜெயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை கொழும்பிலிருந்து அவரது உடல் எடுத்துச்செல்லப்பட்டு கொக்குவிலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கிரியைகள் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு நடைபெற்று, கொக்குவில் இந்து மயானத்துக்கு தகனத்துக்காக அவரது உடல் எடுத்துச் செல்லப்படும்.

1933ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் திகதி பிறந்த அப்பாத்துரை விநாயகமூர்த்தி, ஜி.ஜி.பொன்னம்பலம், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஆரம்பித்த காலம் தொடக்கம் அவருடன் இணைந்து செயற்பட்டுவந்தார். பிரபல சட்டத்தரணியாகவும் பணியாற்றிய இவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழ் இளைஞர், யுவதிகள் பலரை மீட்டெடுத்தார்.

1989ஆம் ஆண்டு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி சார்பில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் குமார் பொன்னம்பலம் கொழும்பில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் அந்தக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். 2000ஆம் ஆண்டு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு முதன்முறையாகத் தெரிவுசெய்யப்பட்டார்.

இதன் பின்னர் தமிழ்க் கட்சிகள் கூட்டிணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் கீழ் 2001ஆம் ஆண்டு நாடாளுடன்றத் தேர்தலில் போட்டியிட்டிருந்தன. இதன்போது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார். 2004ஆம் ஆண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக மாற்றம் கண்ட பின்னர், வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார்.

2010ஆம் ஆண்டு, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸைச் சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறினார். எனினும், அப்பாத்துரை விநாயகமூர்த்தி 2010ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார். 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *