விபுலானந்தரின் 125ஆவது ஜனன தின நிகழ்வுகள் நாளை மட்டக்களப்பில்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125ஆவது ஜனன தினத்தையொட்டி மட்டக்களப்பில் நாளை (வெள்ளிக்கிழமை) மாபெரும் விழிப்புணர்வு எழுச்சி ஊர்வலங்களை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபையின் தலைவரும் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளருமான க.பாஸ்கரன் தெரிவித்தார்.

இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு, மட்டக்களப்பு பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விழாச் சபையின் தலைவர் க.பாஸ்கரன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

மேலும் அவர் ”சுவாமியின் 125ஆவது ஜனன தினத்தை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளதுடன் போட்டிகளும் பல்வேறு மட்டத்தில் நடைபெற்றுவருகின்றன. இதன் இறுதி நிகழ்வுகள் விமர்சையான முறையில் நடைபெறவுள்ளது.

அதன்முன்னோடியாக நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6.30மணிக்கு பட்டிருப்பு பாலம் மற்றும் சித்தாண்டி சந்தியில் இருந்து இரண்டு ஊர்வலங்கள் ஆரம்பமாகும்.

ஊர்திகள் சகிதம் இந்த ஊர்வலங்கள் ஆரம்பமாகவுள்ளதுடன், ஊர்வலமானது கல்லடியில் உள்ள சுவாமியின் சமாதியினை வந்தடையவுள்ளது.

பட்டிருப்பில் ஆரம்பமாகும் ஊர்வலம் களுவாஞ்சிகுடி ஊடாக களுதாவளை, தேற்றாத்தீவு, கிரான்குளம், புதுக்குடியிருப்பு, தாழங்குடா ஊடாக கல்லடியை வந்தடையும்.

அதேபோன்று சித்தாண்டி முருகன் ஆலய சந்தியில் இருந்து ஆரம்பமாகும் ஊர்வலம் வந்தாறுமூலை, கொம்மாதுறை, ஏறாவூர், ஆறுமுகத்தான் குடியிருப்பு, தன்னாமுனை ஊடாக கல்லடியை வந்தடையும்.

அதனைத்தொடர்ந்து கல்லடி உப்போடையில் உள்ள மணிமண்டபத்தில் நிகழ்வுகள் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விழிப்புணர்வு பேரணி நடைபெறும் அன்றைய தினம் குறித்த ஊர்வலம் வரும் பகுதிகளில் உள்ள மக்கள் வீதிகளை துப்புரவுசெய்து தோரணங்களை கட்டி நிறைகுடங்களை வைத்து வரவேற்கும் பணிகளைசெயுமாறு” என தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *