வவுனியாவில் இடம்பெற்ற நடமாடும் சேவை தொடர்பில் மக்கள் விசனம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வவுனியாவில் மாவட்ட செயலகத்தின் வழிகாட்டலுடன் வவுனியா பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட ‘நில மெகவர’ ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நடமாடும் சேவை ஒன்று பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக நடத்தப்பட்டது.

இந்த நடமாடும் சேவையில் வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களைச் சேர்ந்த பெருமளவான பொது மக்கள் காணி பிணக்குகளுக்கு தீர்வு காண்பதற்காக வருகை தந்துள்ளனர்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இடம்பெறும் இந்த நடமாடும் சேவையில் பயன்பெறுவதற்கு அதிகளவான மக்கள் நீண்ட வரிசையில் கொழுத்தும் வெய்யிலுக்கு மத்தியிலும் காத்திருந்தனர்.

அத்துடன் வயதானவர்கள் மற்றும் சிறுவர்கள் சன நெரிசலில் சிக்குண்ட நிலையில் கூட்டத்தில் சிக்கிய இரண்டு குழந்தைகளை ஊடகவியலாளர்கள் காப்பாற்றி அவர்களின் பெற்றோர்களிடத்தில் ஒப்படைத்த சம்பவும் இடம்பெற்றுள்ளது.

நடமாடும் சேவை நடைபெற்ற இடத்தில் மக்களை சரியாக ஒழுங்குபடுத்தாமையினால் அதிகாரிகளால் மக்களின் ஆவணங்களை சரிபார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் அதிகாரிகளின் மேசை கதிரை போன்ற தளபாடங்கள் தள்ளி வீழ்த்தப்பட்ட நிலையில் பொலிசாரால் ஆவணங்கள் அள்ளிச் செல்லப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மக்கள் அதிகமாக கூடியதன் காரணமாக பாடசாலையின் பிரதான வாயில் இழுத்து மூடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வவுனியா உதவி பிரதேச செயலாளர் சாரதா கரனிடம் ஊடகவியலாளர்கள் தொடர்பு கொண்டு வினவிய போது மக்களுக்கான அனைத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளது மக்கள் முண்டியடிப்பதன் காரணமாக நிலைமையை சமாளிக்க முடியாதுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *