ஐ.நாவின் அழுத்தம் வந்தாலே பரிந்துரைகள் அமுலாக்கப்படும்! – செல்வம் எம்.பி. சுட்டிக்காட்டு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அழுத்தங்களைக் கொடுத்தால்தான் இலங்கை அரசு பரிந்துரைகளை நிறைவேற்றும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோது, இறுதிப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்திருந்திருந்தார். இதற்குப் பதிலளித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“ஐக்கிய நாடுகள் பேரவையினால், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன எனவும், அவை, இறுதிப் போரின்போது, அதிகளவில் இடம்பெற்றன எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள், சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட விசாரணைக் குழுவால், விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதனை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை முன்னெடுப்பதாகவும், ஏனைய நல்லிணக்கப் பொறுமுறைகள் உட்பட ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றவும் இலங்கை அரசு மேலும் இரண்டு வருடங்கள் கால அவகாசம் கோரியிருந்தது.

இவ்வாறான நிலையில், இலங்கை அரசு, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நிபந்தனைகளுக்கு இணங்கி, கால அவகாசத்தையும் பெற்றுள்ள இவ்வேளையில், போர்க்குற்றங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், வடக்கு மாகாணத்துக்குத் தேவையான அதிகாரத்தை வழங்கியுள்ளதாகவும் பாரிய பொய்யொன்றை முக்கிய அமைச்சராக உள்ள ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கும் அப்பால், இலங்கையில் சிங்கள மக்கள் வாழ்வது போன்றே, தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் சகல உரிமையையும் சலுகைகளையும் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்று வடக்கு, கிழக்கில், பாரிய நில மீட்புப் போராட்டங்களும், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான போராட்டங்களும், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான போராட்டங்களும் இடம்பெற்றுவரும் நிலையில், எதனை சாதித்துவிட்டதாக அரசு பறைசாற்ற முயல்கின்றது என்பது கேள்விக்குரிய விடயமாகும்.

எனவே, தெற்கில் ஒரு கதையும், வடக்கில் இன்னொரு கதையும் பேசும் தென்னிலங்கை அரசியல்வாதிகளையும், இலங்கை அரசையும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். இரண்டு வருடங்கள் கால அவகாசத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை இலங்கை அரசு நிறைவேற்றுக்கின்றதா என்பது தொடர்பில் குறித்த காலப்பகுதிக்கொருமுறை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆய்வை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் இலங்கை அரசின் மீது அழுத்தத்தையும் பிரயோகிக்க வேண்டும்” – என்றுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *