கொழும்புக்கு இன்று வருகிறது சைட்டம் எதிர்ப்புப் பேரணி! – கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை அரசுடமையாக்குமாறு கோரி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் நாடளாவிய ரீதியில் கடந்த நான்கு நாட்களாக முன்னெடுத்துவரும் பேரணி இன்று கொழும்பை நோக்கி வரவுள்ளது.
கண்டியில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான  மாணவர்கள் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து நாட்டின்  பல்வேறு நகரங்களிலிருந்தும் இன்று கொழும்பை வந்தடையும் வகையில் பேரணிகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன.
நேற்றுமுன்தினம் கொழும்பில் சைட்டத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டிருந்த போராட்டத்துக்கு 100இற்கும் அதிகமான தொழிற்சங்கத்தினர் ஆதரவுத் தெரிவித்திருந்தனர். கொழும்பிலுள்ள பல்வேறு அரசு நிறுவனங்களுக்கு முன்பாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சரின் உருவப் பொம்மைகளை அவர்கள் எறித்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இந்தப் போராட்டம் காரணமாக நேற்றுமுன்தினம் கொழும்பின் புறநகர்களுக்கான போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டிருந்தது.
இதேவேளை, சைட்டத்துக்கு எதிராக நேற்றுமுன்தினம் நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் கறுப்புப்பட்டி அணிந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இன்றைய தினம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பல்வேறு நகரங்களிலிருந்தும் கொழும்பை நோக்கி வரவுள்ளதால் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
நேற்றுமுன்தினத்தைவிட இன்று கடுமையான போக்குவரத்து நெரிசல் கொழும்பில் ஏற்படக்கூடும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *