போர்க்குற்றச்சாட்டுக்குள்ளான மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேக்கு விசா மறுத்தது ஆஸி.!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

போர்க்குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேக்கு நுழைவு விசா வழங்க ஆஸ்திரேலியா மறுத்துள்ளது.

ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்றுள்ள தனது சகோதரரைப் பார்ப்பதற்காக, மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே ஒரு மாத கால ஆஸ்திரேலிய நுழைவு விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது. எனினும், இறுதிப் போரின்போது, 2009 மே 7ஆம் திகதி தொடக்கம், 2009 ஜூலை 20ஆம் திகதி வரை 59 ஆவது டிவிசனுக்குத் தலைமை தாங்கினார் என்பதாலேயே மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேயின் நுழைவு விசா விண்ணப்பம் ஆஸ்திரேலியாவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

தனது தலைமையில் இலங்கைப் படையினர் நிச்சயமாக போர்க்குற்றங்களையும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களையும் இழைத்துள்ளனர் என்று ஆஸ்திரேலிய தூதரகம் தெரிவித்தது என்று மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்தின் காலாட் படைகளின் பணிப்பாளராகப் பணியாற்றும் மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே, இறுதிக்கட்டப் போரில் முக்கிய பங்கு வகித்த இலங்கை இராணுவத் தளபதிகளில் ஒருவர். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டியே ஆஸ்திரேலிய குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்புத் திணைக்களம் மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேயின் நுழைவு விசா கோரிக்கையை நிராகரித்துள்ளது.

அத்துடன், இலங்கையில் 40 ஆயிரம் பொதுமக்கள் வரையில் இறுதிப் போரில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்த – 2011 மார்ச் 31ஆம் திகதி வெளியிடப்பட்ட ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையையும் ஆஸ்திரேலியா மேற்கோள் காட்டியிருக்கின்றது.

இறுதிக்கட்டப் போரில் இலங்கைப் படையினர், ஆளில்லா வேவு விமானங்களின் மூலம் திரட்டிய படங்கள் மூலம், களமுனைத் தளபதிகள் இலக்குகளைத் தீர்மானித்தனர் என்று மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கூறியிருந்த கருத்தை மேற்கோள் காட்டிய ஆஸ்திரேலியா, மூன்றாவது போர் தவிர்ப்பு வலயம் மீது ஆட்லறி தாக்குதலை நடத்துகின்றோம் என்பதை மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே அறிந்திருந்தார் என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

மேஜர் ஜெனரல் கல்லகே, போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைத் திட்டமிட்டு, நடைமுறைப்படுத்தி ஆதரவளித்தார் என்று ஆஸ்திரேலியா குற்றம்சாட்டியிருக்கின்றது.

தமது கட்டுப்பாட்டில் இருந்த படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்கத் தவறிவிட்டார் என்றும் ஆஸ்திரேலியா கூறியுள்ளது.

மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேக்கு எதிராக ஆஸ்திரேலியா போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதானது, தமிழ் மக்கள் மீது இலங்கைப் படையினரால் திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்பதை ஆஸ்திரேலியா நம்புகின்றது என்பதை வெளிப்படுத்துவதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *