வடக்கை இப்போது ஆழ்வோர் புலிகளே! – இது நாட்டுக்குப் பேராபத்து என்கிறது மஹிந்த அணி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
“வடக்கு மாகாணத்தை இப்போது விடுதலைப்புலிகளே ஆட்சி செய்கின்றனர். அங்கு கடும்போக்குவாதிகள் தலைதூக்கிவிட்டனர். அதேபோன்று தெற்கில் பாதாள உலகக் குழுக்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. தெற்கை அவர்களே ஆள்கின்றனர். மஹிந்தவின் ஆட்சி கவிழ்ந்த பின்னரே இந்த அபாயகரமான – பாரதூரமான நிலைமை ஏற்பட்டுள்ளது.”
– இவ்வாறு மஹிந்த அணி அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
மஹிந்த ஆட்சியில் அழிக்கப்பட்ட பாதாள உலகக் குழுக்கள் தற்போதைய தேசிய அரசில் மீண்டும் வந்துள்ளன என்றும் மஹிந்த அணி சுட்டிக்காட்டியுள்ளது.
மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த இது குறித்து தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியில் இந்த நாடு ஒரு கட்டுக்கோப்பான நாடாக இருந்தது. மஹிந்த போரை வெற்றிகொண்டு முழு நாட்டையும் ஒரு முழுக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தார். மஹிந்த ஆட்சியில் பாதாள உலகக் குழுக்களின் அச்சுறுத்தல் இருக்கவில்லை. பாதாள உலகக் குழுக்கள் முற்றாக ஒழிக்கப்பட்டிருந்தன. தற்போதைய தேசிய அரசு வந்ததும் பாதாள உலகக் குழுவினர் மீண்டும் வந்துவிட்டனர். தெற்கின் நிலைமை மிக மோசமாக இருக்கின்றது. தெற்கை இப்போது ஆள்வது பாதாளக் குழுவினர்தான். தினமும் கொள்ளையும் கொலையும் இடம்பெற்றுகின்றன. தெற்கின் நிலைமை இப்படியென்றால் வடக்கு நிலைமை இதைவிட மோசம்.
வடக்கில் இப்போது கடும்போக்குவாதிகள் தலைதூக்கிவிட்டனர். இந்த நாட்டின் இறைமைக்கு எதிராக அச்சமின்றிப் பேசுகின்றனர். படையினருக்கு எதிராகப் பேசுகின்றனர். ஆறு மாதங்களுக்குள் படையினரை அங்கிருந்து அகற்றாவிட்டால் பலவந்தமாக விரட்டுவோம் என்று கூறுகின்றனர்.
வடக்கு மாகாணத்தைத் தற்போது விடுதலைப்புலிகள்தான் ஆட்சி செய்கின்றனர் . அதனால்தான் இவ்வாறு துணிகரமாகப் பேச முடிகின்றது. பொலிஸ் வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்படுகின்றது. ஜனாதிபதியினதும் பிரதமரினதும் முன்னிலையில்தான்  இவையெல்லாம் நடக்கின்றன.
மஹிந்தவின் ஆட்சியில் இப்படியொரு நிலைமை தோன்றவில்லை. அச்சமற்ற வடக்கை மஹிந்த உருவாக்கிக் கொடுத்திருந்தார். ஆனால், இப்போது வடக்கு முழுவதும் அச்சத்தால் மூழ்கியுள்ளது. இனவாதக் கருத்துக்களும் பிரிவினைவாதக் கருத்துக்களும் அங்கு மேலோங்கத் தொடங்கியுள்ளன.
மீண்டும் பழைய யுகத்தை நோக்கியே இந்த நாடு நகர்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு ஆதரவாக வாக்களித்தார்கள் என்பதற்காக இவ்வளவு தூரம் நாட்டைக் காட்டிக்கொடுக்கத் தேவையில்லை” – என்று கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *