நீதிபதி இளஞ்செழியன் மீது திட்டமிட்டே துப்பாக்கிச்சூடு! – வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் தெரிவிப்பு 

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
“யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனைக் கொலைசெய்யும் திட்டத்துடனேயே அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது”  என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“நல்லூரில் கடந்த 22ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியனே இலக்குவைக்கப்பட்டிருக்கின்றார். அவரது மெய்ப்பாதுகாவலரான சிங்கள பொலிஸ் உத்தியோகத்தரே தனது உயிரைக் கொடுத்து நீதிபதியைக் காப்பாற்றியுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தனது மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகத்தரின் குடும்பத்தினரைக் கண்டதும் அவர்களது கால்களில் விழுந்து அழுதமை மற்றும் மெய்ப்பாதுகாவலரின் பிள்ளைகளைத் தத்தெடுத்தமை எல்லாவற்றையும் தொலைக்காட்சி ஊடாகப் பார்த்தேன். நான் மட்டுமல்ல, தென்னிலங்கை மக்கள் அனைவரும் அதனைப் பார்த்து இப்படியும் தமிழ் மனிதர்கள் இருக்கின்றனரா? என்று வியப்படைகின்றனர். இது நல்லிணக்கத்துக்கு சிறந்த அடையாளம்.
நீதிபதி இளஞ்செழியனின் உயிரைக் காப்பாற்ற இன, மத, மொழி பேதம் இல்லாமல்  சிங்களப் பொலிஸ் உத்தியோகத்தரான மெய்ப்பாதுகாவலர் தனது உயிரைத் தியாகம் செய்துள்ளார்.
அவருக்கு மட்டுமல்ல, தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலருக்கும் சிங்களப்  பொலிஸாரே பாதுகாப்பு
வழங்குகின்றனர்” – என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *