ஸ்ரீலங்கா, இந்தியாவிற்கு இடையில் பொருளாதார உடன்படிக்கை?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஸ்ரீலங்காவிற்கு மேற்கொள்ளவுள்ள விஜயத்தின்போது, கூட்டு அபிவிருத்தி தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இந்தியாவின் த வயர் (The Wire) இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடன் சுமையில் சிக்கியுள்ள ஸ்ரீலங்கா சீனாவின் பிடியில் இருந்து விடுபடுவது கடினமானது என்பதால், இதனைச் சமநிலைப்படுத்தும் வகையில், திருகோணமலைத் துறைமுகத்தை இந்தியாவுடன் இணைந்து கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கு ஸ்ரீலங்கா முன்வந்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுடன் கூட்டு அபிவிருத்தி திட்டம் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட ஸ்ரீலங்கா அரசாங்கம் தயாராக இருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கொழும்புக்கான பயணத்தின் போது, இந்த உடன்படிக்கை கையெழுத்திடப்படக் கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, இருதரப்பு உறவுகளை மீளாய்வு செய்வதற்கு ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த மாத இறுதியில் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

பொருளாதார ரீதியான சாத்தியக்கூறுகள் இல்லாத காரணத்தால் இந்தியா கடந்த காலங்களில் திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் ஆர்வம் காட்டவில்லை.

எனினும் தாம் ஆட்சியில் இருந்த போது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை மேற்கொள்ளுமாறு இந்தியாவிடமே முதலில் கேட்டதாகவும், இந்தியா மறுப்புத் தெரிவித்த பின்னரே சீனாவிடம் அதனை ஒப்படைத்ததாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

இந்த வாய்ப்பை இந்தியா பயன்படுத்திக் கொள்ள மறுத்ததால், அங்கு சீனாவின் கடுமையான தலையீடுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அங்கு சிறப்பு பொருளாதார வலையம் ஒன்றை அமைக்கவும், மத்தள விமான நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்வதற்கு சீனாவுக்கு ஸ்ரீலங்கா அனுமதி அளித்துள்ளதோடு, இது தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றிலும் கைச்சாத்திடுவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

திருகோணமலை துறைமுகத்தை கூட்டாக இணைந்து அபிவிருத்தி செய்வதற்கு ஸ்ரீலங்கா எடுத்துள்ள முடிவு நல்லதொரு அடையாளமாக பார்க்கப்படுவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்காவில் சீனாவின் முதலீட்டிலான திட்டத்தின் மூலம், இந்தியப் பெருங்கடலில் சீனாவுக்குச் சொந்தமான, சீனாவினால் நடத்தப்படும் பகுதி ஒன்று உருவாகுமென இந்திய மூலோபாய சிந்தனையாளர் பிரமா செல்லானி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச கடந்த வருடம் இந்திய விஜயத்தில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்காவில் சீனாவின் ஆதிக்கம் மற்றும் முதலீடுகள் தொடர்பில் இந்தியா அதிருப்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *