ஐந்து அமைச்சுக்களின் செயற்பாடுகளை ஆராய வடக்கு மாகாண சபையின் சிறப்பு அமர்வு 21 இல்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வடக்கு மாகாண சபையின் ஐந்து அமைச்சுக்களினதும் கடந்த மூன்றரை வருடகால செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கான சிறப்பு அமர்வு எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறும் என அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அறிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா விடுத்த கோரிக்கைக்கு அமையவே இந்தச் சிறப்பு அமர்வு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் 98 ஆவது அமர்வு கடந்த வியாழக்கிழமை மாகாண சபையின் பேரவைச் செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா மற்றும் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் வடக்கு மாகாண சபையின் மூன்றரை வருடகால செயற்பாடுகளை ஆராய்வதற்கான சிறப்பு அமர்வு ஒன்றை ஏற்பாடு செய்யவேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்தனர்.

அதற்குப் பதிலளித்த அவைத் தலைவர், “எதிர்வரும் 21ஆம் திகதி விசேட அமர்வு கூட்டப்படும். அந்த அமர்வு தேவையைப் பொறுத்து 2 அல்லது 3 நாட்கள் நடைபெறலாம்” என்றார்.

அதன்போது எழுந்த சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம், “ஒவ்வொரு வருடமும் வரவு – செலவுத் திட்ட விவாதங்களில் அமைச்சர்கள் தங்கள் நடவடிக்கைகள், முன்னேற்றங்கள் தொடர்பாக சபைக்கு அறிக்கை கொடுக்கின்றனர். அப்படிக் கொடுத்த பின்னர் அதன் மேல் விவாதம் நடத்தப்படுமா? அப்படி நடத்தப்பட்டால் மூன்றரை வருடகால செயற்பாடுகள் தொடர்பான அறிக்கை தயாரிப்பதற்கு அமைச்சர்களுக்கு கால அவகாசம் வேண்டும்” எனக் கூறினார்.

அப்போது மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன், “ஒவ்வொரு வருடமும் 4 அமைச்சர்களும் தமது நடவடிக்கைகள் முன்னேற்றங்கள் தொடர்பாக வழங்கும் அறிக்கைகள் எங்களிடம் உள்ளன. ஆனால், முதலமைச்சரின் அமைச்சுடைய செயற்பாடுகள், முன்னேற்றங்கள் தொடர்பாக எந்த அறிக்கையும் வழங்கப்படுவதில்லை” என்றார்.

இந்நிலையில் 5 அமைச்சுக்களும் தங்கள் மூன்றரை வருட காலச் செயற்பாடுகள் தொடர்பாக அறிக்கை கொடுத்ததன் பின்னர் அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு விவாதம் நடத்தலாம் அல்லது வருடந்தோறும் வரவு – செலவுத் திட்ட காலத்தில் அமைச்சுக்களால் வழங்கப்பட்ட அறிக்கைகளை வைத்துக் கொண்டு அவற்றிலிருந்து கேள்விகளைப் பெற்று விவாதிக்கலாம் என்ற யோசனைகளை அமைச்சர் சத்தியலிங்கம், உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் முன்வைத்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கருத்துக் கூறுகையில், “அமைச்சர்கள் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டியதில்லை. அமைச்சர்கள் அல்லது அமைச்சுக்கள் தொடர்பாக மக்களால் வெளிக்கொணரப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்துப் பேசலாம்” எனக் கூறினார். அதைத் தொடர்ந்தே 21 ஆம் திகதி விசேட அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *