காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயம் தொடர்பிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அவசர கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“காணாமல்போனவர்களுடைய விடயம் மிகவும் பாரதூரமான ஒரு விடயம் என்பதையும், இப்பிரச்சினைக்கான தீர்வைக் கோரி வடக்கு, கிழக்கில் காணாமல்போனவர்களின் குடும்ப உறவினர்களால் பல மாதகாலமாகப் போராட்டங்கள் நடாத்தப்பட்டு வருவதையும் தாங்கள் அறிவீர்கள்.
இந்தக் குடும்பங்களில் அதிகம் பேர் தமது உறவினர்களைப் பாதுகாப்புப் படையினரிடம் கையளித்தவர்கள் அல்லது தமது உறவினர்கள் பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டுக் கொண்டு செல்வதைக் கண்டவர்களாவார்கள். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் கணிசமான தொகையினர் இளமையான குடிமக்கள் என்பதோடு அவர்கள் ஆயுதப் போராட்டத்தில் சம்பந்தப்படாதவர்களாவர்.
காணாமல்போனோருடைய குடும்பங்களில் அதிகமானோரை நான் சந்தித்திருக்கின்றேன். இறுதியாக நான் ஜுலை 12ஆம் திகதி கிளிநொச்சியில் காணாமல்போனவர்களின் குடும்பங்களைச் சந்தித்தேன்.
காணாமல்போனோருடைய சில குடும்பங்களைச் சேர்ந்தவர்களை தாங்களும் சந்தித்துள்ளீர்கள்.
இந்தக் குடும்பங்களினால் எனக்குத் தெரிவிக்கப்பட்ட விடயங்களில் இருந்து அறியக்கூடியதாக இருப்பது பின்வரும் விடயங்களைப் பகிரங்கப்படுத்த அரசு உறுதியளித்துள்ளது என்பதாகும்.
(1) மேதகு தாங்கள் அரச கடமைப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட வேளையில் கைதாகித் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களி ன் பெயர்கள் மற்றும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த இடங்கள்.
(2) தற்போது தடுப்பில் இருப்பவர்களின் பெயர்கள், மற்றும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்கள்.
(3) கைதிகளாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிலரைத் தடுத்து வைத்துள்ளதாகக் கூறப்படும் இரகசியத் தடுப்பு முகாம்கள் பற்றிய தகவல்கள் அறிந்துள்ள குடும்ப உறவினர்களுக்கு அத்தகைய முகாம்களுக்குச் சென்று பார்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்தல்.
(4) கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆக்கப்பட்ட காணாமல்போனவர்களுக்கான அலுவலகம் தொடர்பான சட்டம் நடைமுறைக்கு வரும்போது, மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு படிமுறைகளூடாகக் காணாமல்போனவர்களுடைய குடும்பங்களின் வேதனையான பிரச்சினையை ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதற்குச் சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்படும். இந்தச் செயற்பாடுகள் ஊடாக உண்மையான தகவல்கள் கிடைக்காமையால் குடும்பங்கள் எதிர்கொள்ளும் நிச்சயமற்ற நிலைமையில் ஏற்படும் மன உளைச்சல்கள் முடிவுக்குக் கொண்டு வரப்படும்.
இது மிகக் கஷ்டமான ஒரு விடயம் என்பதில் சந்தேகமில்லை. ஆயினும், இந்த நாட்டின் பிரஜைகளாகிய, காணாமல்போனவர்களின் குடும்பங்களின் கடுமையான மனக் காயங்களை ஆற்றுப்படுத்த வேண்டிய கடமைப்பாடு இந்த அரசுக்கு உண்டு.
எனவே, இத்தகைய விடயங்களை உள்ளீர்த்துச் செயற்படுத்தக்கூடிய நிகழ்ச்சித் திட்டமொன்றைத் தயாரிக்குமாறு அதிமேதகு தங்களை நான் கேட்டுக் கொள்கிறேன். காணாமல்போனவர்களுடைய விடயங்களை அர்த்தமுள்ள வகையிலும் உரிய நோக்கங்களை அடையும் வகையிலும் கையாள்வதற்கான வழிமுறைகளை நான் மேலே 1, 2, 3 மற்றும் 4 பிரிவுகளில் சுட்டிக்காட்டியுள்ளேன்” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.





