புதிய அரசமைப்பு தொடர்பில் சம்பந்தன் – தினேஷ் சந்திப்பு! – விரைவில் கூட்டுப் பேச்சுக்கும் ஏற்பாடு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் மஹிந்த அணியான பொது எதிரணிக்குமிடையில் விரைவில் முக்கிய பேச்சு நடைபெறவுள்ளது.

பொது எதிரணியின் அழைப்பின்பேரில் இந்தப் பேச்சு கொழும்பில் நடைபெறவுள்ளது எனவும், இதன்போது புதிய அரசமைப்பு உருவாக்கம் உட்பட பல விடயங்கள் ஆராயப்படும் எனவும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேரில் சந்தித்த பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இந்தப் பேச்சுக்கான அழைப்பை விடுத்துள்ளார் எனவும் சுமந்திரன் எம்.பி. மேலும் கூறினார்.

புதிய அரசமைப்பு உருவாக்கத்தை முன்னெடுக்கும் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் இந்தப் பேச்சு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொது எதிரணியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குமிடையில் கடந்த மாதம் 29ஆம் திகதி சத்தம் சந்தடியின்றி சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

மஹிந்தவின் அழைப்பின்பேரில் அவரது கொழும்பு, விஜேராம மாவத்தை இல்லத்தில் நடைபெற்ற அந்தச் சந்திப்பில் புதிய அரசமைப்பு உருவாக்கம் உட்பட தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து இருவரும் பேச்சு நடத்தியிருந்தனர்.

அந்தச் சந்திப்பின் தொடர்ச்சியாகவே இந்தப் பேச்சு இடம்பெறவுள்ளது.

அடுத்த ஓரிரு தினங்களில் நடைபெறும் இந்தப் பேச்சில் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும், பொது எதிரணியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, டலஸ் அழகப்பெரும ஆகியோரும் பங்குபற்றவுள்ளனர்.

இவர்கள் நால்வரும் புதிய அரசமைப்பு உருவாக்கத்தை முன்னெடுக்கும் வழிநடத்தல் குழுவின் உறுப்பினர்களாவர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *