வடக்கு அமைச்சர்கள் விவகாரம்: கூட்டமைப்பு எம்.பிக்களுடன் பேசியே முடிவு என்கிறார் சம்பந்தன்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

“வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல், மோசடி குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை அறிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்துப் பேசவேண்டும். அதன்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்க்கமான முடிவை நாம் எடுக்கவேண்டும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான ஊழல், மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையின் விவகாரமும் ஆராயப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,

“இந்த விடயத்தை பத்திரிகைகளில்தான் நான் பார்த்தேன். அதேவேளை, வடக்கு மாகாண முதலமைச்சர் அறிக்கையை புதன்கிழமை சபையில் சமர்ப்பித்துள்ளார். இந்தக் கூட்டத்திலும் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை.

இந்த விடயத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்தே கலந்துரையாடவேண்டும். அதன்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்க்கமான முடிவை நாம் எடுக்கவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 14 ஆம் திகதி, வடக்கு மாகாண சபையில் இந்த விடயம் விவாதத்துக்கு எடுக்கப்படும் அதே நாளில்தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூடி ஆராய்வர் என்று தெரியவருகின்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *