ரவியை நீக்குவது நாட்டுக்கு நல்லது! – துமிந்தவை நீக்குவது சு.கவுக்கு நல்லது என்கிறார் டிலான்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

“ரவி கருணாநாயக்க அமைச்சுப் பதவியிலிருந்தும் துமிந்த திஸாநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும் நீக்கப்படவேண்டும்” என்று அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ரவியை நீக்குவது நாட்டுக்கு நல்லது எனவும், துமிந்தவை நீக்குவது கட்சிக்கு நல்லது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

“2020இல் தனித்து ஆட்சியமைக்கவேண்டும் என்ற இலக்குடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பயணித்துக்கொண்டிருக்கின்றது. ஆனால், அந்த இலக்கை அடையமுடியாமல் சில தடைகள் போடப்படுகின்றன. அந்தத் தடைகள் இப்போதிலிருந்தே நீக்கப்படவேண்டும்.

அரசிலுள்ள அமைச்சர்கள் பலர்தான் அந்தத் தடைகள். அவர்கள் நீக்கப்பட்டால் எல்லாம் சரிவரும். முதலில் ரவி கருணாநாயக்க அமைச்சுப் பதவியிலிருந்தும், துமிந்த திஸாநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும் நீக்கப்படவேண்டும். ரவியை நீக்குவது நாட்டுக்கு நல்லது. துமிந்தவை நீக்குவது கட்சிக்கு நல்லது.

ரவி நிதி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது நல்ல விடயம். ஆனால், அவர் இப்போது வகிக்கும் அமைச்சுப் பதவியிலிருந்தும் நீக்கப்படவேண்டும். அதாவது, அமைச்சுப் பதவியே அவருக்கு வழங்கப்படக்கூடாது. ஊழல்வாதிகளுக்கு இடங்கொடுத்தால் நாடு சீரழிந்துவிடும். அது சுதந்திரக் கட்சியையும் பாதிக்கும்.

துமிந்த திஸாநாயக்கவை கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கினால் கட்சி உறுப்பட்டுவிடும். அவர் ஒரு குழந்தை. அவரால் கட்சியை வெற்றிபெறச் செய்யமுடியாது. முன்னாள் ஜனாதிபதி தொடர்பில் அவர் அண்மையில் கூறிய கருத்து பாரதூரமானது.

மஹிந்தவுக்கு வேட்பாளர் நியமனம் வழங்கப்படமாட்டாது என்று கூறும் அதிகாரம் அவருக்கு இல்லை.

கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியதை ஏற்கமுடியாது. அவரால் தனித்து முடிவெடுக்கமுடியாது. கட்சியின் மத்திய குழுதான் அது தொடர்பில் முடிவெடுக்கும்.

ஜோன் செனவிரத்ன, நிமால் சிறிபால டி சில்வா மற்றும் சமல் ராஜபக்ஷ போன்றவர்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை ஏற்றால் மாத்திரமே கட்சியை ஒற்றுமைப்படுத்தி 2020இல் தனித்து ஆட்சி அமைக்கமுடியும். இல்லாவிட்டால் ஐக்கிய தேசியக் கட்சியே ஆட்சியைப் பிடிக்கும்” – என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *