புலிகளின் யோசனையை ஏற்றிருந்தால் 2005 இல் ஜனாதிபதியாகியிருப்பார் ரணில்! – ஹக்கீம் தெரிவிப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

விடுதலைப்புலிகளின் இடைக்கால அரசு யோசனையை ஏற்றிருந்தால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2005ஆம் ஆண்டே ஜனாதிபதியாகியிருப்பார் என்றும், எனினும், நாட்டு நலனைக் கருத்தில்கொண்டு அத்திட்டத்தை அவர் நிராகரித்தார் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அரசியல் வாழ்வில் 40 வருடங்களை நிறைவுசெய்த பிரதமர் ரணிலுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“1977 இல் அரசியலுக்குள் பிரவேசித்த ரணில் விக்கிரமசிங்க நுண்ணறிவும், துணிவும், பொறுமையும், நிதானமும் கொண்டவராக அரசியல் தலைவருக்கு இருக்கவேண்டிய குணாம்சங்களைக் கொண்டவராகத் திகழ்கின்றார்.

நேர்மையாகச் செயற்படக்கூடிய அரசியல்வாதி அவர். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவுக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பத்தில் அதைத் தெளிவாகக் காணக்கூடியதாக இருந்தது. நெருக்கடியான சூழ்நிலைகளிலும் கொள்கைப்பற்றுடனும், தன்னம்பிக்கையுடனும் கட்சியை வழிநடத்தி இறுதியில் வெற்றியின் வழிக்கு இட்டுச்சென்றார்.

குறிப்பாக, விடுதலைப்புலிகள் முன்வைத்த இடைக்கால அரசு கோரிக்கையை அவர் ஏற்றிருந்தால் 2005 இல் ஜனாதிபதியாகிருப்பார். எனினும், நாட்டின் நலனை முன்னிறுத்தி அதை அவர் நிராகரித்தார். உலக நாடுகளிலிருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. எனினும், மக்கள் நலனை முன்னிறுத்தி அவர் செயற்பட்டார்.

கடந்த அரசில் (மஹிந்த அரசில்) நான் அமைச்சராக இருந்தேன். யுத்த வெற்றியை அடிப்படைவாத முறையில் கொண்டாடினர். இனங்களுக்கிடையில் குரோதத்தைத் தூண்டினார்கள். பிரஜைகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அந்த அரசில் அமைச்சராக இருந்ததையிட்டு கவலையடைகின்றேன்.

அவற்றுக்கெல்லாம் எதிராக எதிர்க்கட்சியில் இருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குரலெழுப்பி இன ஒற்றுமையை மையப்படுத்தி செயற்பட்டார். அவருக்கு எமது கட்சி மற்றும் மக்கள் சார்பில் வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்துக்கொள்கின்றேன்” – என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *