ரணில் விக்கிரமசிங்க விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைப் போன்றவர். அவர் பிரபாகரனுக்குச் சமமானவர்.
உள்நாட்டு தரப்புக்கள் மற்றும் ஊடகங்களை விடவும் பிரபாகர னுக்கு ஆதரவளித்தது போல் பன்னாட்டு சமூகம், பன்னாட்டு ஊடகங்கள் அவருக்கு ஆதரவு வெளியிடுகின்றன. இவ்வாறு கூறியுள்ளது பொதுபலசேனா அமைப்பு.
கொழும்பில் பொதுபலசேனா நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலர் மாகல்கந்தே சுதந்த தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டில் கூட்டு அரசை அமைத்த பின்னர் 3 ஆண்டுகள் பொறுமை காத்த அரச தலைவர் தற்போது தலைமை அமைச்சரை மாற்றும் முடிவை எடுத்துள்ளார்.
நாங்களும் அரச தலைவரைப் பலமுறை அவதூறாகப் பேசியுள்ளோம். இப்படியான சிறந்த முடிவை மேற்கொள்ளும் ஆத்ம தைரியம் அவரிடம் உண்டு என்பதை நாம் அறிந்திருக்கவில்லை.
கடந்த காலத்தில் நாட்டைச் சிறப்பாக நிர்வகித்த மகிந்த ராஜபக்சவால்தான் தற்போதுள்ள நிலையில் இருந்து நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியும் என்று பொதுபல சேனா அமைப்பு நம்புகின்றது.
நாமல் குமார மூலமே மைத்திரி கொலைச் சதிமுயற்சி வெளிவந்தது. அதன் பின்னரே அவர் இத்தகையதொரு தீர்மானத்திற்கு வந்திருக்கின்றார். கொலைச்சதியுடன் சரத்பொன்சேகா தொடர்புபட்டுள்ளார் என்று நாமல்குமார குறிப்பிட்டுள்ளார். அவர் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூட்டினை நடத்துமாறு கூறிய அர்ஜுன ரணதுங்க இன்னமும் கைது செய்யப்படவில்லை.
நிறைவேற்றதிகாரமுடைய அரச தலைவர் முறைமை நீக்கப்படக் கூடாது. அதன்மூலமாகவே இன்று அரச தலைவரால் சிறந்ததொரு தீர்மானத்தை மேற்கொள்ள முடிந்துள்ளது – என்றார்.





