ஆசிரியர் ஒருவரை தேடி பொலிஸார் வலைவீச்சு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் இரு அதிபர்கள் ஆகியோரின் போலி கையொப்பங்களுடனும் போலி அரச இறப்பர் இலச்சினைகளுடனும் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு அரச வங்கியொன்றில் பதின்மூன்று இலட்சம் ரூபா கடன்பெற்று தலைமறைவாகியிருக்கும் ஆசிரியர் ஒருவரைத் தேடி மொனராகலைவிசேட குற்றத் தடுப்புப் பொலிஸார் வலை விரித்துள்ளனர்.

வெள்ளவாய வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ. ரட்ணசிரி மொனராகலை விசேட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்தே பொலிஸார் தீவிர புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்டு குறிப்பிட்ட ஆசிரியரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் குறித்த ஆசிரியர் தலைமறைவாகியிருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த ஆசிரியருக்கு கடன்பெற திஸ்ஸமாராமை நுண் நிதிக்கடன் நிறுவன முகாமையாளர் பூரண உதவிகளை செய்திருப்பதும் ஆரம்ப புலனாய்வு விசாரணைகளின் போது தெரிய வந்திருப்பதாக மொனராகலை விசேட குற்றத் தடுப்புப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆசிரியர் போலி ஆவணங்களை சமர்ப்பித்து அரச வங்கி முகாமையாளரையும் ஏமாற்றி பதின்மூன்று இலட்சம் ரூபாவினை கடனாகப் பெற்று பிரதேசத்தை விட்டு தலைமறைவாகியுள்ளார்.

பெற்றகடன் குறிப்பிட்ட காலப்பகுதியில் செலுத்தப்படாதலால் அரச வங்கியிலிருந்து கடன் பெற்றவருக்கு அனுப்பப்பட்ட கடிதங்கள் பலவும் மீளவும் வங்கியை சென்றடைந்துள்ளன. இதன் பின்னர் அரச வங்கி முகாமையாளர் பெற்ற கடன் விடயம் குறித்து குறிப்பிட்டு வலயக் கல்வி பணிப்பாளருக்கு அவசரக் கடிதமொன்றினை அனுப்பியுள்ளார். இதையடுத்து கல்விப் பணிப்பாளர் அரச வங்கி முகாமையாளரை சந்திக்கச் சென்றதும் அனைத்து விபரங்களும் அவருக்கு தெரிய வந்துள்ளன.

இதன் பின்னரே வலயக் கல்விப் பணிப்பாளர் மொனராகலை விசேட குற்றப் புலனாய்வு துறையினருக்கு முறைப்பாடு செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து மொனராகலை விசேட குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவினர் தீவிர புலனாய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.