காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து சர்வதேச விசாரணை கோரி வடக்கில் ஆர்ப்பாட்டங்கள்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து சர்வதேச விசாரணை கோரி வடக்கில் ஆர்ப்பாட்டங்கள்!

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து சர்வதேச விசாரணையை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி வடக்கு மாகாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு, துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. வடக்கில் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா மாவட்டங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

மன்னார்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்குப் பகிரங்க வேண்டுகோளை முன்வைக்கும் வகையில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்டவர்களின் குடும்ப உறவினர்கள் பொதுமக்களுக்குத் துண்டுப்பிரசுரங்களை வழங்கினர். மன்னார் பஸார் பகுதியில் ஒன்றுகூடிய உறவினர்களே தங்களால் தயாரிக்கப்பட்ட துண்டுபிரசுரங்களை மன்னார் அரச பஸ் தரிப்பிடப் பகுதியில் வைத்து மக்களுக்கு வழங்கினர்.

வவுனியா

வவுனியாவில் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், “நாம் கையளித்த எமது உறவுகள் எங்கே?”, “இரகசிய முகாங்களிலுள்ள எமது உறவுகளை விடுதலை செய்”, “சிறைகளிலுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்”, “ஐ.நாவே காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி வேண்டும்”, “ஐ.நாவே இலங்கை அரசுக்குக் கால நீடிப்பை வழங்காதே”, “காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து சர்வதேச விசாரணை வேண்டும்”, “சர்வதேசமே எங்களுக்குத் தீர்வைத் தா”, “சர்வதேசமே நீதியைப் புதைக்காதே” என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் கோஷங்களையும் எழுப்பினர்.

யாழ்ப்பாணம்

போர்க்காலத்தில் காணாமல்போனவர்களின் உண்மை நிலையைக் கண்டறிவதற்கான விசாரணைக்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கால நீடிப்பை வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து சர்வதேச விசாரணையை மேற்கொள்ளுமாறு கோரியும் யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் போராட்டத்தை யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் முன்னெடுத்திருந்தனர். போராட்டத்தின்போது மக்களுக்குத் துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

 

Tamil Technology News

 

Tamilnadu News